Published : 17 Jul 2015 08:54 PM
Last Updated : 17 Jul 2015 08:54 PM

ரூ.676.51 கோடி மதிப்பிலான கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளத்துறை திட்டங்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறைகள் சார்பில் ரூ.676.51 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆழ்கடலில் மீன்பிடிக்க நவீன வசதிகளுடன் சூரை மீன்பிடி படகுகள் கட்ட ரூ.30 லட்சம் மானியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதன்படி தேர்வான 171 மீனவர் குழுக்களை சேர்ந்த 580 மீனவர்களுக்கு ரூ.51.30 கோடி ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். 5 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நலநிதி திட்டத்தின் கீழ் 49 பயனாளிகளுக்கு ரூ.85.75 ஆயிரம் நிதியையும், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மீன்வளத்துறைக்கு 3 ரொந்து படகுகளையும் முதல்வர் வழங்கினார்.

திருவண்ணாமலையில் பால் பண்ணை மற்றும் பால் பவுடர் தொழிற்சாலை, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 237 கால்நடை மருந்தகங்கள், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட 2 மாவட்டங்களில் 12 இடங்களில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்கு தளங்கள், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மீன்வளக்கல்லூரி, நெல்லை ராமையன்பட்டி, தஞ்சை ஒரத்தநாட்டில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரிக்கான கட்டிடம் என ரூ.379.23 கோடி மதிப்பிலான கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இவைதவிர, ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி உள்ளிட்ட ஆறு இடங்களில் ரூ.44.70 கோடியில் மீன் இறங்கு தளங்கள், சென்னை நந்தனம் ஆவின் வளாகத்தில் ரூ.31.29 கோடியில் நுகர்வோர் நல மையம், கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணத்தில் ரூ.82.73 கோடியில் அமைக்கப்படும் கடலரிப்பு தடுப்பு சுவர் என ரூ.244.74 கோடியில் அமையும் கட்டுமானங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த, அடிக்கல் நாட்டிய திட்டங்கள் மற்றும் மானியம் மற்றும் உதவித்தொகையின் மதிப்பு ரூ.676.51 கோடி ஆகும்'' என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x