Published : 14 Oct 2019 06:25 PM
Last Updated : 14 Oct 2019 06:25 PM

மதுரை அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து: 3 நாட்களுக்கு கதிரியக்க சிகிச்சை நிறுத்திவைப்பு; நோயாளிகள் தவிப்பு

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை அறையில் இன்று (அக்.14) தீ விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட அறை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டதால் 3 நாட்களுக்கு நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைப்பிரிவில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த சிகிச்சைப்பிரிவில்

51-வது வார்டில் ‘கோபால்ட் தெரபி’ என்ற கதிரியக்க சிகிச்சை கருவி உள்ளது. புற்றுநோயாளிகளுக்கு இந்த கருவியை கொண்டு தினமும் கதிரியக்க சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த கருவி வைக்கப்பட்டுள்ள அறையிலிருந்து கதிரியக்கம் வெளியே சென்றால் மற்றவர்களுக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படும். அதனால், கதிரியக்கம் வெளியே போக முடியாத அளவுக்கு இந்த கோபால்ட் தெரபி கருவி வைக்கப்பட்டுள்ள அறையின் சுவர் 3 அடி முதல் 4 அடி வரையிலான தடிமனை கொண்டு மிக பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறையில் இன்று காலை வழக்கம்போல் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கதிரியக்க சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த அறையின் ஏசி மிஷினுக்கு செல்லும் வயரிங்கில் மின் பழுது ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. அறையில் கரும் புகைமூட்டமும், வயர்கள் தீப்பிடித்ததால் பிளாஸ்டிக் நெடியும் ஏற்பட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், சிகிச்சைப்பெற்ற நோயாளியை வெளியே அனுப்பிவிட்டு ஊழியர்களைக் கொண்டு தீயை அணைத்தனர். அதனால், கோபால்ட் தெரபி கருவி வைக்கப்பட்டுள்ள இந்த அறையில் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது.

கோபால்ட் தெரபி கருவி தீப்பிடித்தால் சிறிய அணுகுண்டு வெடித்ததற்கு சமம். அதனால், தற்போது அந்த அறையில் உள்ள அனைத்து வயரிங்கையும் பழுதுப்பார்த்து மீண்டும் விபத்து ஏற்படாமல் இருக்க பழுதுப்பார்க்கும் பணிகள் நடக்கின்றன.

அதனால், புற்றுநோயாளிகளுக்கு 3 நாட்களுக்கு கதிரியக்க சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். இடையில் நிறுத்தப்பட்டால் நோயின் வீரியமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘கோபால்ட் தெரபி கருவி வைக்கப்பட்டுள்ள அறை சுவரில் டைல்ஸ் சுவர் பதிக்கும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டுள்ளது. இந்த அறை சுவரைப் பழுதுபார்க்க இந்திய அணுசக்தி துறை அனுமதி பெற்றிருக்க வேண்டும். அந்தளவுக்கு பாதுகாப்புமிக்க இந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சிகிச்சைப்பிரிவு அறை தரையும், வழுவழுப்பாகவே உள்ளது. தேவையில்லாமல் அதையும் உடைத்து டைல்ஸ் பதிக்க பராமரிப்பு பணிகள் நடக்கிறது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கை இல்லாமல் பணி நடப்பதாலே இந்த தீவிபத்து நடந்துள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x