Published : 27 Mar 2014 12:00 AM
Last Updated : 27 Mar 2014 12:00 AM
நான்கு முறை தன்னைச் சந்திக்க வந்த அன்புமணியை, ரங்கசாமி மணிக்கணக்கில் காக்க வைத்ததால்தான் பாமக புதுவை தொகுதியை என்.ஆர்.காங்கிஸுக்கு விட்டுக் கொடுக்காமல் மல்லுக்கட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பே மாநில அமைப்பாளர் அனந்தராமனை வேட்பாளராக அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டது பாமக. இந்த நிலையில் புதுவையில் பாஜக கூட்டணியின் இறுதிவடிவம் தெரியாமலேயே ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்துவிட்டது என்.ஆர்.காங்கிரஸ். இரண்டு தரப்பும் பாஜக கூட்டணியில் மோடி பிரதமராக வாக்கு கேட்பதாகக் கூறுகின்றனர்.
கையெழுத்திடப்படவில்லை
இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் விஸ்வேஸ்வரனிடம் கேட்ட தற்கு, “புதுவை கூட்டணி தொடர்பாக எழுதி கையெழுத்திடப்படவில்லை. வாய்மொழியாகத்தான் தெரிவிக்கப் பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தான் பாஜக கூட்டணி வேட்பாளர் என தலைமை தெரிவித்துள்ளது. அதன்படி செயல்படுகிறேன்” என்றார். இந்நிலை யில் பாஜக கூட்டணி வேட்பாளர் யார் என்று தெரியாததால் திங்கள்கிழமை தனது புதுச்சேரி பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார் விஜயகாந்த்.
காத்திருக்கிறோம்
இதுகுறித்து புதுச்சேரி மாநில தேமுதிக செயலாளர் செல்வராஜ் பேசியதாவது, “பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், பாமக இந்த 3 கட்சிகளுமே எங்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார்கள். எங்கள் தலைமை இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.
காக்க வைத்த காரணமா?
என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமியிடம், ‘அன்புமணியை காக்க வைத்த காரணத்தினால்தான் பாமக புதுவையை உங்களுக்கு விட்டு தர மறுக்கிறதா?’ என்று கேட்டதற்கு, “புதுச்சேரி பாஜக கூட்டணி வேட்பாளர் தொடர்பாக பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை விரைவில் சந்திக்க இருக்கிறேன்.
இந்த பிரச்சினை விரைவில் தீரும் என்று எதிர்ப்பார்கிறேன்” என்றார். பாமக மாநில அமைப்பாளர் அனந்தராமனிடம் கேட்ட தற்கு, “அன்புமணி ரங்கசாமியை நேரில் சந்திப்பதற்காக புதுச்சேரிக்கு நான்குமுறை வந்தார். அப்போது அவரை பல மணிநேரம் ரங்கசாமி காக்க வைத்தார்.
மத்திய அமைச்சராக இருந்தவர் அன்புமணி. அத்துடன் விரைவில் மத்திய அமைச்சராக போகிறவர். அவரை இவ்வளவு நேரம் காக்க வைத்துவிட்டு, இப்போது எப்படி சென்று அவர்களை ரங்கசாமி சந்திப் பார் என தெரியவில்லை. யார், யாரை சந்தித்தாலும் புதுச்சேரியில் பாமக போட்டியிடுவது உறுதி” என்று வெளிப் படையாகவே சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT