Published : 01 Jul 2015 02:17 PM
Last Updated : 01 Jul 2015 02:17 PM

தூய்மையைப் பேண பயணிகள் ஒத்துழைக்க வேண்டும்: மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை மெட்ரோ ரயிலையும், ரயில் நிலையங்களையும் சுத்தமாக, தூய்மாக வைத்துக் கொள்ள பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று காலை சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் மு.க.ஸ்டாலின் பயணித்தார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக்கில், "நவீனமயமான, தூய்மையான, பசுமையான மெட்ரோ ரயில் திட்டம் உள்ள மாநகரங்களின் பட்டியலில் சென்னை மாநகரம் இணைந்திருக்கிறது.

உலகத் தரம் வாய்ந்த சென்னை மெட்ரோ ரயிலில் இன்றைய தினம் பயணம் செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம்.

இந்த கனவு திட்டத்தை நனவாக்க நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது பாடுபட்டிருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை நிறைவேற்ற பாடுபட்ட பொறியாளர்கள், தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மெட்ரோ ரயிலையும், ஸ்டேஷன்களையும் சுத்தமாக, தூய்மாக வைத்துக் கொள்ள பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இனி வரும் காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் விரிவுபடுத்தப்பட்டு மேலும் பல புதிய ஸ்டேஷன்கள் திறக்கப்படுகின்ற போது சென்னையில் போக்குவரத்திற்கு தனியார் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து, அதிகமான மக்கள் மெட்ரோ ரயில் போன்ற புதிய போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x