Published : 12 Oct 2019 03:44 PM
Last Updated : 12 Oct 2019 03:44 PM

காஷ்மீர் ஆலோசிக்கப்பட்டதா? பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சில் இடம் பெற்ற அம்சங்கள் என்ன?

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வழியனுப்பி வைத்த பிரதமர் மோடி : படம் ஏஎன்ஐ

மாமல்லபுரம்,

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் இரு நாட்கள் நடந்த முறைசாரா சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீட்டில் உள்ள சிக்கல்களை தீர்க்க புதியமுறை உருவாக்கப்படும் என மத்திய அரசு தெரிவி்த்துள்ளது.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-வது முறைசாரா சந்திப்பு சென்னை மாமல்லபுரத்தில் இருநாட்கள் நடந்தது. இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் இரு நாட்டு வர்த்தகம், முதலீடு, தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வறு விஷயங்கள் குறித்துஆலோசனை நடத்தினர்.


இந்த சந்திப்பு அதிகாரபூர்வமற்றது என்பதால், எந்தவிதமான ஒப்பந்தமும் இரு தலைவர்களுக்கும் இடையே கையொப்பமாகவில்லை. ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினைகள், வர்த்தக சிக்கல்கள், வர்த்தகப் பற்றாக்குறை ஆகியவற்றை தீர்க்கும் முறைகள் குறித்து ஆலோசித்தனர்.


இரு தலைவர்களின் சந்திப்பில் என்ன பேசப்பட்டதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நிருபர்களிடம் கூறியது:

  • பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த இரு நாட்களில் மொத்தம் 6 மணிநேரம் நடந்தது.
  • இன்று இரு தலைவர்களுக்கும் இடையேயான சந்திப்பு 90 நிமிடங்கள் நடந்தது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் மட்டத்தில் பேச்சும், அதன்பின் அனைவருக்கும் பிரதமர் மோடி மதிய விருந்தளித்தார்.
  • இந்தியா, சீனா இடையே நிலவி வரும் வர்த்தகம், முதலீடு சேவைகளை புதிய உயரத்துக்கு அதிகரிக்கவும், சிக்கல்களை தீர்க்கவும் புதிய முறையை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன
  • சீனா சார்பி்ல துணை பிரதமர் ஹு சுன்ஹுவாவும், மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அந்த குழுவில் இடம் பெறுவார்கள்.
  • இந்தியா, சீனா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்கு சீனா தயாராக இருக்கிறது.
  • பிராந்திய அளவிலான பொருளாதார கூட்டுறவு(ஆர்சிஇபி) குறித்து இந்தியா தெரிவித்த கவலைகள் விரைவில் ஆலோசிக்கப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்தார்
  • விதிமுறைகள் அடிப்படையில் சர்வதேச வர்த்தக முறை உருவாக்கும் முக்கியத்துவம் குறித்து பிரமதர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வலியுறுத்தினர்.
  • முக்கியத்துவம் வாய்ந்த பிராந்திய,சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் கூட்டுறவுடன் தோழமையுடன் செயல்பட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்
  • பாதுகாப்பு விஷயத்தில் இரு நாடுகளுக்கு இடையே கூடுதல் ஒத்துழைப்பு கோரப்பட்டது.
  • தீவிரவாதத்தை எதிர்காலத்தில் எவ்வாறு கையாள்வது, எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தீவிரவாதத்தை இரு நாடுகளும சேர்ந்து எதிர்கொள்வது குறித்து பேசப்பட்டது
  • இந்த கூட்டத்தில் காஷ்மீர் விஷயம் எழுப்பப்படவில்லை, காஷ்மீர் விஷயம் ஆலோசிக்கப்படவும் இல்லை.
  • இவ்வாறு கோகலே தெரிவித்தார்.·

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x