Last Updated : 12 Oct, 2019 03:41 PM

1  

Published : 12 Oct 2019 03:41 PM
Last Updated : 12 Oct 2019 03:41 PM

பட்டாசு தயாரிக்கும் தொழில்கூடத்தில் வெடி விபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு; 2 பெண்கள் சிகிச்சைக்காக அனுமதி; முதல்வர் நாராயணசாமி நேரில் ஆறுதல்

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

பட்டாசு தயாரிக்கும் தொழில்கூடத்தில் திடீரென்று ஏற்பட்ட விபத்தில் கூடமும், குடோனும் வெடித்து சிதறியதில் 3 பெண்கள் உடல் உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் உடல் காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி பாகூர் அடுத்த கரையாம்புத்தூர் ஏரிக்கரை ஒட்டிய அய்யனார் கோயில் அருகே பட்டாசு தயாரிக்கும் தொழில்கூடம் மற்றும் குடோன் உள்ளது. ஊரிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் மாயவன் என்பவரது இடத்தில் இந்த பட்டாசு ஆலை அமைந்துள்ளது. அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்த குணசுந்தரி (45), இத்தொழில் கூடத்தின் உரிமையாளராக உள்ளார். இவர் கரையாம்புத்தூரிலேயே தங்கி இத்தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

தீபாவளியொட்டி நேற்று (அக்.11) பட்டாசு வெடிகள் தயாரிக்கும் பணியில் 5 பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் பட்டாசு தயாரிப்பு கூடமும், குடோனும் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறத்தொடங்கியது. வெடிசத்தம் தொடர்ந்து கேட்டதை அடுத்து கிராம மக்கள் அப்பகுதிக்கு ஒடி வந்து பார்த்தனர்.

இதையடுத்து மடுகரை தீயணைப்பு நிலையத்துக்கும், பாகூர் போலீஸாருக்கும் தகவல் தந்தனர். மடுகரை, பாகூர் உள்ளிட்ட இடங்களில் 3 தீயணைப்பு வாகனங்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.

பணியில் இருந்த கரையாம்புத்தூர் மாரியம்மன் கோயில் வீதி விக்ரமனின் மனைவி வரலட்சுமி (எ) ஞானாம்பாளும் (44), விழுப்புரம் சொர்ணாவூர் கீழ்பாதி முதல் தெருவைச் சேர்ந்த பிரபுவின் மனைவி தீபா (37) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்திருந்தனர்.

தொழில்கூட உரிமையாளர் குணசுந்தரி, விழுப்புரம் கிருஷ்ணாபுரம் அம்பேத்கர் வீதியைச் சேர்ந்த கன்னியப்பன் மனைவி வைத்தீஸ்வரி (27), புதுச்சேரி கரையாம்புத்தூர் மேட்டுத்தெரு சின்னசாமி மனைவி கலாமணி (45) ஆகியோர் வெடி விபத்தில் படுகாயமடைந்திருந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைத்தீஸ்வரி உயிரிழந்தார்.

இதுகுறித்து பாகூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெடி விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை இன்று (அக்.12) முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறும்போது, "வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன். தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் நிதி உதவி பற்றி தற்போது தெரிவிக்க முடியாது," என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x