Published : 12 Oct 2019 03:01 PM
Last Updated : 12 Oct 2019 03:01 PM
சென்னை
மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடந்த 2-வது முறைசாரா சந்திப்பு, ஆக்கப்பூர்வமாக இருந்தது, இந்தியா, சீனா இடையிலான நட்புறவுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
சீன அதிபர் ஜி ஜின்பி்ங், பிரதமர் மோடி இடையிலான 2-வது முறைசாரா சந்திப்பு மாமல்லபுரத்தில் நேற்றும், இன்றும் நடந்தது. இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, தீவிரவாதம், தீவிரவாத ஒழிப்பு, எல்லைப்புற பிரச்சினைகள், வர்ததகத்தில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார்கள்.
சென்னை கனெக்ட் என்று சொல்லக்கூடிய மாமல்லபுரம் சந்திப்புக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்த தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.
இரு நாட்கள் நடந்த சந்திப்பு முடிந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி தனது இரு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார்.
கோவளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்துக்கு பிரதமர் மோடி வந்தார். அங்கிருந்து தனிவிமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டார். விமானநிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள் வந்து வழியனுப்பி வைத்தனர்.
பிரதமர் மோடி டெல்லி புறப்படும் முன் சென்னை கனெக்ட் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், சீனாவின் மாண்டரின் மொழியில் ட்விட் செய்தார்.
அதில் " நமது இரண்டாவது முறைசாரா உச்ச மாநாட்டில் பங்கேற்க வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்த சென்னை கனெக்ட் சந்திப்பு இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும், உலகத்துக்கும் பயன் அளிக்கும்.
தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கும் நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எப்போதும்போல், அவர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன.ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்" எனத் தெரிவி்த்துள்ளார்.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT