Published : 12 Oct 2019 01:38 PM
Last Updated : 12 Oct 2019 01:38 PM

சென்னை சந்திப்பு இந்தியா-சீனா கூட்டுறவில் புதிய சகாப்தம் படைக்கும்: பிரதமர் மோடி  பெருமிதம்

பிரதமர்மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் : படம் ஏஎன்ஐ

மாமல்லபுரம்


கடந்த ஆண்டு நடந்த உஹான் முறைசாரா சந்திப்பு இந்தியா, சீனா உறவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி புதிய மலர்ச்சியை கொடுத்தது, ஆனால் மாமல்லபுரம் முறைசாரா சந்திப்பு இரு நாட்டு கூட்டுறவில் புதிய சகாப்தத்தை படைக்கும் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-வது முறைசாரா சந்திப்பு சென்னை மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. சென்னைக்கு நேற்று வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மிக உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாமல்லபுரத்துக்கு நேற்று சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி இன்முகத்துடன் வரவேற்றார். இருவரும் பல்லவர் கால கோயில்கள், சிற்பங்கள், கட்டிடங்களை கண்டு ரசித்தனர். இரு தலைவர்களும் தீவிரவாதம், தீவிரவாத ஒழிப்பில் கூட்டாக செயல்படுவது உள்ளிட்டவை குறித்து 150 நிமிடங்கள் பேசினார்கள். அதன்பின் கலைநிகழ்ச்சிகளை இரு தலைவர்களும் கண்டுரசித்தனர்.

இந்நிலையில் முறைசாரா சந்திப்பின் 2-ம்நாளான இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் உள்ள நடத்திர ஓட்டல் ஒன்றில் சந்தித்து பேசினர். அப்போது இரு தரப்பு நாடுகளின் வர்த்தகம், முதலீடு, வர்த்தகப் பற்றாக்குறை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்.

அதன்பின் நிருபர்களிடம் இரு தலைவர்களும் பேசினர். பிரதமர் மோடி கூறுகையில், " கடந்த ஆண்டு உஹானில் நடந்த முதல்கட்ட முறைசாரா சந்திப்பின் உதவியால் இந்தியா, சீனா உறவு, ராஜாங்கரீதியான தொடர்புகளில் முன்னேற்றம் கண்டோம்.

இரு நாடுகளும் வேறுபாடுகளை புரிந்துகொண்டு, பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் செல்ல வேண்டும், உணர்வுப்பூர்வமான விஷயங்களில் இருதரப்பும் பரஸ்பர மதிப்பு அளிக்க வேண்டும் என்று பேசப்பட்டது. அந்த இலக்கை இரு நாடுகளும் அடைந்து வருகிறோம், அடுத்த கட்டத்துக்கும் உறவை எடுத்துச் செல்கிறோம்.

எங்களின் இந்த சென்னை சந்திப்பு நிகழ்ச்சியில் இருதரப்புக்கும் இடையிலான முக்கியமான விஷயங்களில் ஆழ்ந்த விவாதம் நடந்தது.

கடந்த ஆண்டு உஹானில் நடந்த முதல்கட்ட முறைசாரா சந்திப்பு புதிய உற்சாகத்தை இருதரப்புக்கும் அளித்து, நம்பிக்கையை வழங்கி இருக்கிறது. இருநாட்டு கூட்டுறவில் புதிய சகாப்தத்தை இந்த சென்னை சந்திப்பு எட்டும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்

சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறுகையில், " மாமல்லபுரத்தில் எனக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பலைப் பார்த்து மிகவும் உளமகிழந்தேன். இந்திய அரசும், தமிழக மக்களும் அன்புடன், நட்புடன், இன்முகத்துடன் சீன அரசு மீதும், மக்கள் மீதும் நட்பு வைத்துள்ளீர்கள். இந்த நட்பை நாங்கள் வரவேற்கிறோம்.

மாமல்லபுரம் வந்தது எனது வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். எனது இந்த வருகை சீன மக்கள் மத்தியிலும் ஆழ்ந்த சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா-சீன உறவுகள்குறித்து சீன ஊடகங்கள் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

முறைசாரா சந்திப்பு நடத்த வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் மோடி என்னிடம் கடந்த ஆண்டு தெரிவித்தார். உஹான் சந்திப்புபினால் ஏராளமான முன்னேற்றங்கள், பலன்கள் கிடைத்து வருவது தெரிய வருகிறது. இரு தரப்பு உறவுகளை வளர்க்கவும், பிரச்சினைகளைக் களையும் இந்த சந்திப்பு உதவும். இதுபோன்ற சந்திப்பு நடத்த வேண்டும் என்று நாங்களும் சரியான முடிவு எடுத்துள்ளோம்.

இன்றும், நேற்றும் நாங்கள் இருவரும் நட்புரீதியாக சில ஆலோசனைகளில் ஈடுபட்டோம். குறிப்பாக இருதரப்பு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதில் ஆழ்ந்த ஆலோசனை நடத்தினோம். இப்போது நடந்துள்ள எங்களின் சந்திப்பு குறித்தும், பேசப்பட்டவை குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிகாரிகள் மட்டத்தில் அடுத்த கட்டமாக ஆழ்ந்த பேச்சு நடத்தப்பட வேண்டும். எனக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே நேற்று நடந்த சந்திப்பில் பேசப்பட்டசில விஷயங்கள் தொடர்பாக இன்றும் ஆலோசனை நடத்தினேன்" எனத் தெரிவித்தார்

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x