Published : 12 Oct 2019 11:20 AM
Last Updated : 12 Oct 2019 11:20 AM
விருதுநகர்
விருதுநகரில் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவான சத்துணவு மாவில் புழு மற்றும் வண்டு இருப்பதைக் கண்டு தாய்மார்களும் கர்ப்பிணிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளைப் போக்க தமிழக அரசு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் அங்கன்வாடி மையங்கள் மூலம் இணை உணவாக சத்துணவு மாவு வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் 1,502 அங்கன்வாடி மையங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் 215 மெ.டன் சத்துமாவு மாதந்தோறும் விநியோகம் செய்யப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் உள்ள தளவாய்புரம் இணை உணவு தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டு தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் இந்த சத்துமாவு தயாரிக்கப்படுகிறது. இதில், கோதுமை மாவு, வெல்லத்தூள், சோயா மாவு, வறுத்த கேழ்வரகு மாவு, முளைகட்டிய கேழ்வரகு மாவு, செறிவூட்டப்பட்ட பாமாயில், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் மூலப்பொருளாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், இந்தச் சத்துமாவில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், வைட்டமின்-ஏ, நியாசின், போலிக்ஆசிட், கொழுப்புச் சத்து, எனர்ஜி, இரும்புச் சத்து, வைட்டமின் பி-1, வைட்டமின் பி-2, வைட்டமின் சி போன்ற சத்துகளும் உள்ளன.
விருதுநகர் மாவட்டம் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளதால் மத்திய அரசு கணக்கெடுத்த முன்னேறத் துடிக்கும் 117 மாவட்டங்களில் ஒன்றாக விருதுநகர் மாவட்டமும் சேர்க்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் மாவட்டத்தின் வளர்ச்சியை மத்திய அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்து கண்காணித்து வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகர் மாவட்டப் பொறுப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரம், சிசு இறப்பு தடுப்பு, பிரசவத்தில் குழந்தை இறப்பைத் தடுத்தல், பெண் குழந்தை பிறப்பு விகிதம், கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண்மை, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்வேறு அளவுகோல் அடிப்படையில் முன்னேறத் துடிக்கும் விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறு இருக்கையில், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவு தரமில்லாமல் கொடுக்கப்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சத்துமாவு தயாரிக்கப்பட்ட நாளிலிருந்து 4 மாதங்கள் வரை மட்டுமே அவை பயன்படுத்த உகந்தவை. அதனால் ஒவ்வொரு சத்துமாவு பாக்கெட்டிலும் அது தயாரிக்கப்பட்ட மாதம், காலாவதியாகும் மாதம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால், கடந்த ஜூலை மாதம் தயாரிக்கப்பட்டு நடப்பு அக்டோபர் மாதம் வரை பயன்படுத்த உகந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள சத்துணவு மாவு பாக்கெட்டுகளிலும் புழு, வண்டு இருப்பதைக் கண்டு கர்ப்பிணிகளும், தாய்மார்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பலர் அங்கவாடியில் புழு, வண்டுடன் கொடுக்கப்பட்ட சத்துணவு மாவு பாக்கெட்டுகளைத் திருப்பிக் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொறுப்பு) ராஜம் கூறுகையில், ''இதுபோன்ற குறைபாடுகள் இருப்பது குறித்து இதுவரை எந்தப் புகாரும் எங்களுக்கு வரவில்லை. அவ்வாறு குறைபாடு இருப்பது தெரிந்தால் உடனடியாக குறிப்பிட்ட அங்கன்வாடியில் உள்ள அனைத்து சத்துணவு மாவுப் பாக்கெட்டுகள் ஆய்வு செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு புதிய சத்துணவு மாவு வழங்கப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT