Last Updated : 12 Oct, 2019 11:20 AM

6  

Published : 12 Oct 2019 11:20 AM
Last Updated : 12 Oct 2019 11:20 AM

யார் இந்த மதுசூதன்? மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் தமிழக அதிகாரி

மாமல்லபுரத்தில் நேற்று நடந்த சந்திப்பில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் : படம் உதவி பேஸ்புக்

சென்னை,

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-வது முறைசாரா சந்திப்பில், பின்புலத்தில் முக்கிய அங்கமாக தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

சீனாவில் உள்ள மாண்டரின் மொழியில் வல்லவரான, எளிதாகவும், தெளிவாகவும் புரிந்துகொண்டு பேசக்கூடிய தமிழகத்தைச் சேர்ந்த மது சூதன்( ஐஎஃப்எஸ் அதிகாரி) தற்போது பிரதமருக்குத் துணையாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தச் சந்திப்பில் மட்டுமல்லாது கடந்த ஆண்டு ஏப்ரல் 27 மற்றும் 28-ம் தேதி சீனாவில் உஹான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி சந்திப்பிலும் தமிழகத்தைச் சேர்ந்த மது சூதன் மொழிபெயர்ப்பாளர் பணியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்தவரான மது சூதன் 2007-ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி பேட்ஜ் (ஐஎஃப்எஸ்). இவர் தன்னுடைய பெரும்பாலான பணிக்காலத்தை சீனாவில் கழித்துள்ளார் என்பதால் சீன மொழியான மாண்டரினை நன்கு கற்றுள்ளார்.

ஐஎஃப்எஸ் படித்து பயிற்சி முடித்த பின், கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பெய்ஜிங்கில் உள்ள இந்திய துணைத் தூதகரத்தில் 3-வது பிரிவு செயலாளராக மது சூதன் நியமிக்கப்பட்டார். அதன் பின் 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை அமெரிக்காவின் சான்பிராஸ்சிஸ்கோ நகரில் துணைத் தூதராகப் பணியாற்றினார்.

அங்கிருந்து மீண்டும் சீனாவின் இந்தியத் தூதரகத்தில் (அரசியல்) பணி அமர்த்தப்பட்டார். 2013-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 2-ம் நிலை செயலாளராகவும், 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முதல் நிலை செயலாளராகவும் மது சூதன் பணியாற்றினார். தற்போது இந்திய வெளியுறவுத்துறையில் துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

பொதுவாக வெளியுறவுத்துறையில் துணைச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர்களை மொழிபெயர்ப்பாளராக அழைப்பது அவரின் பதவிக்குக் குறைவானதாகும். ஆனாலும், மாண்டரின் மொழியில் வல்லவரான மது சூதன் மத்திய அரசின் அழைப்பின்பேரில் பிரதமர் மோடிக்கு மொழிபெயர்ப்புப் பணியைச் செய்து வருகிறார்

இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே மொழிபெயர்ப்பாளராக இருப்பது என்பது கடினமான பணி. இந்தப் பணியில் இருக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் நேரடியாகவும், சுருக்கமாகவும், தெளிவாகவும் அர்த்தம் மாறாமல் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.

இருநாடுகளுக்கு இடையிலான ராஜாங்க ரீதியான உறவுகள் என்பதால் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய கடினமான பணியாகும். எந்தவிதமான வார்த்தைகளையும் மாறாமல், தவறாக அர்த்தம் புரிந்துகொள்ளாமல் தெரிவிப்பது இந்தக் கலையின் முக்கிய அம்சமாகும்.

வெளியுறவுத்துறை அதிகாரி மது சூதன்(படம் உதவி ஃபேஸ்புக்)

யார் இந்த மது சூதன்?

தமிழகத்தைச் சேர்ந்த மது சூதன் 2002-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் முடித்தவர். அதன்பின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பல்கலைக்கழகத்தில் 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை எம்.ஏ. மொழிமாற்றம் மற்றும் பேச்சுக்கலைப் பிரிவில் பட்டம் பெற்றார்.

மது சூதனுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், மாண்டரின்(சீன மொழி) ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய திறமை பெற்றவர். அதிலும் சீனாவில் நீண்டகாலம் பணியாற்றியதால் அவரின்களின் மாண்டரின் மொழியை மதுசூதன் நன்கு கற்றுள்ளார்.

மத்திய அரசுக்கு தற்போது இருக்கும் மிகப்பெரிய கவலை நல்ல, மொழிப்புலமை கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் இருப்பதுதான். தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் 6 பேர் மட்டுமே மொழிபெயர்ப்பு அதிகாரிகள் இருக்கிறார்கள். 26 பேர் வெளிநாடுகளில் உள்ள துணைத் தூதரகங்களில் பணியாற்றுகின்றனர்

தற்போது இருக்கும் 7 மொழிபெயர்ப்பு அதிகாரிகளுக்கும் அதாவது 7 துணைத் தூதர் அளவில் இருக்கும் அதிகாரிகளுக்கும் முறையாக மொழிப் புலமை இல்லை. இதனால், இவர்கள் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் அந்நிய மொழி கல்வித் துறையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முறையான மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீன மொழியில் நன்கு தேர்ச்சி பெற்று மொழிப்புலமையில் இருப்பவர் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர். அடுத்த இடத்தில் இருப்பவர் மது சூதன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான், தற்போது நடக்கும் சீன அதிபர், பிரமதர் மோடி சந்திப்பில் மது சூதன் சிறப்பு மொழிபெயர்ப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சகத்துக்கு தனியாக மொழிபெயர்ப்பு அதிகாரிகள் தேவை, வெளியுறவுத்துறை அதிகாரிகளும் பிறநாட்டு மொழிகளைக் கற்க வேண்டும் என்று திட்டமிட்டவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சரளமாக ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, உருது, பெங்காலி ஆகிய மொழிகளைப் பேசக் கூடிய திறமை பெற்றவர். ஆனாலும், வெளியுறவுத் துறைக்கு தனியாக மொழிபெயர்பாளர்கள் தேவை என்பதை உணர்ந்து கடந்த 1978-ம் ஆண்டு அதற்கான பணியிடம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

போத்திராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x