Published : 23 Jul 2015 10:41 AM
Last Updated : 23 Jul 2015 10:41 AM

கர்நாடகத்தைப் போல் ஊக்கத்தொகை, நிலையான ஆதாரவிலை: போராட்டத்துக்கு ஆயத்தமாகும் தமிழக பட்டுக்கூடு விவசாயிகள்

பட்டுக் கூடுகளுக்கு ஆதார விலையும், கர்நாடகத்தைப் போல் கிலோவுக்கு ரூ.50 ஊக்கத் தொகையும் வழங்க வலியுறுத்தி தமிழக பட்டு விவசாயிகள் விரைவில் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றனர்.

தமிழகத்தில் திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, திருநெல்வேலி, சிவ கங்கை மற்றும் சேலம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் 23,759 விவசாயிகள் பட்டுக் கூடு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக போதிய பருவ மழை இல்லாமல் ஏராளமான விவசாயிகள் பட்டுப் புழுக்களுக்கு தேவையான மல்பரி செடிகளை சாகுபடி செய்ய முடியாமல் மாற்றுத் தொழிலுக்கு மாறினர்.

கடந்த ஓராண்டாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய் துள்ளதால் மீண்டும் விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பட்டுக் கூடுகளுக்கு நிலையான ஆதார விலை, கர்நாடகத்தைப் போல் பட்டுக் கூடுகளுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்காததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள் ளனர். அதனால், அவர்கள் அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் விரைவில் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டு விவசாயிகள் கூட்டமைப்பின் உடுமலைப்பேட்டை விவசாயி ராமகிருஷ்ணன் கூறியதாவது:

ஒரு கிலோ பட்டுக் கூடுகள் உற்பத்தி செய்ய ரூ.240 முதல் ரூ.270 வரை செலவாகிறது. ஆனால், கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ கூடு ரூ.170 முதல் ரூ.250 வரைதான் விலை கிடைக்கிறது. ரம்ஜான் பண்டிகை காரணமாக வியாபாரிகள் பட்டுக் கூடுகள் வாங்க வரவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். எப்போதாவது ஒருமுறைதான் பட்டுக் கூடுகளுக்கு ரூ.300, 350 கிடைக்கிறது. அதனால், உற்பத்திச் செலவைக்கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.

கர்நாடகத்தில் பட்டு விவசாயி களை ஊக்குவிக்க ஒரு கிலோ பட்டுக் கூடுகளுக்கு ரூ.50 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. கேரளத்தில் 50 ரூபாயும், ஆந்திரத்தில் 50 ரூபாயும் வழங்குகின்றனர்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் பட்டுப் புழு முட்டைகள் தரமில்லா மல் உள்ளன. அதனால், 60 சதவீதம் முட்டை பூச்சிகளே பட்டுக் கூடுகளை கட்டுகின்றன. மீதி பட்டுப் பூச்சிகள் கூடு கட்டுவதில்லை. நமது நாட்டுக்குத் தேவையான பட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை நமது விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். 40 சதவீதம் மட்டுமே சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம். நிலையான ஆதார விலை கிடைத்தால் நமது நாட்டுக்குத் தேவையான மொத்த பட்டுக் கூடுகளையும் விவசாயிகள் செய்துகொடுக்க தயாராக உள் ளனர்.

அதனால், சீன பட்டுக் கூடுகள் இறக்குமதியை முற்றிலும் நிறுத்த வேண்டும். பட்டுக் கூடுகளுக்கு நிலையான ஆதாரவிலை கிடைக்க வேண்டும். கர்நாடகம், ஆந்திரம், கேரளத்தைப் போல் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இந்த கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி யும், அரசின் கவனத்தை ஈர்க்கவும் விரைவில் தமிழகம் முழுவதும் பட்டு விவசாயிகள் பட்டுக் கூடு உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக உடுமலைப்பேட்டையில் வரும் ஆக. 1-ம் தேதி விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்க உள்ளனர் என்றார்.

இதுகுறித்து பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: பட்டுக் கூடுகளுக்கு தற்போது ஓரளவு நல்ல விலை கிடைக்கத்தான் செய்கிறது. உற்பத்தி அதிகரிக்கும்போது விலை குறையும். உற்பத்தி குறையும் போது விலை அதிகரிக்கும். விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள், வளர்ப்பு மனை, மல்பரி சாகுபடி மானிய உதவிகள் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் அதிகளவில் வழங்கப்படுகிறது. பட்டுக் கூடு களுக்கான ஊக்கத் தொகை வழங்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x