Published : 11 Oct 2019 08:14 PM
Last Updated : 11 Oct 2019 08:14 PM
மதுரை;
818 அரசு கால்நடை உதவி மருத்துவர்களை நேற்று மதியம் ஒரே உத்தரவின்மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டது உதவி மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கால்நடைதுறை பராமரிப்பு துறையில் 818 உதவி மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருந்தது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு கால்நடை மருத்துவப்படிப்பு முடித்த 818 பேரை ரூ.40,000 ஊதியத்தில் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்து உதவி மருத்துவராக பணிக்கு அமர்த்தியது.
அவர்களும், என்றாவது ஒரு நாள் தங்களுக்கு பணி நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்பில் தொடர்ந்து பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று கால்நடை பராமரிப்பு மருத்துவப்பணிகள் இயக்குனர் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்த இந்த 818 கால்நடை உதவி மருத்துவர்களை பணியிடை முறிவு(Break in Service) என்று சொல்லி உடனடியாகப் பணியில் இருந்து விடுவித்து ஆணை பிறப்பித்துள்ளார்.
அவர், நேற்று மதியம் பேக்ஸ் மூலம் அந்த உத்தரவை அனைத்து மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர்களுக்கும் அனுப்பி, அவர்கள் கட்டுப்பாட்டில் பணிபுரியும் தற்காலிக ஒப்பந்த கால்நடை மருத்துவர்களை நேற்று பிற்பகல் முதல் பணியிடை முறிவு (Break in Service) செய்திட உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அந்த உத்தரவில் பணியிடை முறிவு செய்யப்பட்ட உதவி மருத்துவர்களிடம் இருந்து அவர்கள் பணிபுரிந்த கூடுதல் பொறுப்புகளையும், அந்த மருத்துவமனை பதிவேடுகளை உடனடியாக பெற்றுக்கொள்ள மண்டல இணை இயக்குனர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நாளில் பணியிடை முறிவு என்ற உத்தரவை கேட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், ‘‘நேர்முக தேர்வு அடிப்படையிலே எங்களை பணிநியமனம் செய்தனர். 11 மாதம் என்று எங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிநியனம் செய்தால் அதன்பிறகு உங்கள் பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று வாய்மொழி உறுதி வழங்கப்பட்டது.
ஆனால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நேற்று மதியமே பணியிடை முறிவு என்றவார்த்தையை பயன்படுத்தி பணி நீக்கம் செய்துள்ளனர். இந்த உத்தரவால் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 90 கால்நடை மருத்துவர்களில் 63 மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் 20 மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரும் திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி பணி தொடங்க உள்ளது. இந்த நேரத்தில் 818 கால்நடை உதவி மருத்துவர்கள் பணி நீக்கத்தால் தடுப்பூசி பணி பாதிக்கப்படும்”. என்று கவலையுடன் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT