Published : 11 Oct 2019 05:33 PM
Last Updated : 11 Oct 2019 05:33 PM

இந்தியாவை சீனா வணிகதளமாக மாற்றினால் உள்ளூர் வணிகர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும்: வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா பேட்டி

திண்டுக்கல்

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகபோரால் இந்தியாவை சீனா வணிகதளமாக மாற்ற முயற்சிக்கும். இதனால் உள்ளூர் வணிகர்கள் பாதிக்கப்படாமல் மத்திய அரசு வணிகர்களை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் விக்கிரமராஜா இன்று (வெள்ளிக்கிழமை) திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம், "மாமல்லபுரத்தில் இந்திய பிரதமரும், சீன அதிபரும் சந்திப்பதை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை வரவேற்கிறது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தபோரால் இந்தியாவை சீனா வணிகதளமாக மாற்ற முயற்சிக்கும். இதனால் உள்ளூர் வணிகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு வணிகர்களை பாதுகாக்கவேண்டும்.

தலைவர்கள் சந்திப்பால் மாமல்லபுரம் ஜொலிக்கிறது. அரசு நினைத்தால் குப்பைமேட்டை கோபுரமாக்கும் என்பதற்கு இது உதாரணம்.
இதேபோல தமிழகம் முழுவதும் மாற்ற தமிழக அரசு முன்வரவேண்டும். சொத்துவரி உயர்வு, உள்ளாட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகள் வாடகை பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சரை சந்தித்து பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இதனால் கடைகள் நடத்தமுடியாமல் கடைகளை காலிசெய்துவருகின்றனர்.

இதனால் வணிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். வங்கிகளில் பணபரிமாற்றத்திற்கு என தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மத்திய அரசின் டிஜிட்டல் திட்டம் என்பது முழுமையான வெற்றி என்பது சாத்தியமில்லாதது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x