Published : 11 Oct 2019 12:09 PM
Last Updated : 11 Oct 2019 12:09 PM
சென்னை
தீபாவளிக்கு முந்தைய மற்றும் அடுத்த நாட்களில் நடைபெறும் செய்முறைத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (அக்.11) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கான பருவத் தேர்வு அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அட்டவணைப்படி அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளுக்கும் தீபாவளி அன்று மட்டுமே விடுமுறை என்றும், அதற்கு முதல் நாளும், அடுத்த நாளும் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 3, 5, 9 ஆகிய பருவங்களுக்கான தேர்வுகள் வரும் 21 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாத இறுதி வரை பல்வேறு கட்டங்களில் நடைபெறவுள்ளன. இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு வரும் 19 ஆம் தேதியுடன் வகுப்புகள் நிறைவடையும் நிலையில், 21 ஆம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன. முதல் பிரிவுக்கான தேர்வுகள் 21 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையும், இரண்டாம் பிரிவுக்கான தேர்வுகள் அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன. நவம்பர் 6 ஆம் தேதி எழுத்துத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி இம்மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமையும், அடுத்த நாளான திங்கட்கிழமையும் செய்முறைத் தேர்வுகளை நடத்துவது மாணவ, மாணவியருக்கும் தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தும். தீபாவளி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட கிராமப்புறங்களில் அதற்கு முந்தைய நாளும், அடுத்த நாளும் நோன்பு, உறவினர்கள் ஒன்றுகூடல் உள்ளிட்ட பல்வேறு வகையான கொண்டாட்டங்கள் நடத்தப்படும். அந்த நேரத்தில் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டால், தீபாவளி கொண்டாட்டங்களில் மாணவ, மாணவியரால் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுமார் 500 பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல. நெல்லை, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை நகரிலும், வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோவையிலும் பொறியியல் படிப்பை படிப்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகும். அவ்வாறு படிப்பவர்கள் செய்முறைத் தேர்வை முடித்துக்கொண்டு சொந்த ஊர்களுக்குச் செல்லவும், தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு கல்லூரிகளுக்குத் திரும்பவும் போதிய கால அவகாசம் தேவை.
தீபாவளியையொட்டி பேருந்துகளிலும், ரயில்களிலும் பயணம் செய்ய கடுமையான நெரிசல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தீபாவளிக்கு முதல் நாள் செய்முறைத் தேர்வை முடித்துவிட்டு சொந்த ஊருக்குச் செல்வதோ, தீபாவளியை முடித்துக்கொண்டு அடுத்த நாளே தேர்வுக்குத் திரும்புவதோ சாத்தியமற்றவை என்பதை அனைவரும் அறிவர்.
இவற்றையெல்லாம் ஆராயாமல் அண்ணா பல்கலைக்கழகம் எந்த அடிப்படையில் தேர்வு அட்டவணையை இறுதி செய்தது என்பது தெரியவில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களுக்கும் தீபாவளியையொட்டி, அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமை கூடுதலாக ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதுடன், தேவைப்பட்டால் திங்கட்கிழமையும் விடுமுறை அளிப்பது பற்றி பள்ளிகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
உள்ளூர் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கே 3 நாட்கள் வரை விடுமுறை விடப்படும் நிலையில், பலநூறு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வந்து பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, தீபாவளியன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்துவிட்டு, மற்ற நாட்களில் செய்முறைத் தேர்வுகளை நடத்தத் திட்டமிடுவது எந்த வகையிலும் நியாயமல்ல.
மாணவர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதற்கு வசதியாகவும், தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும் மாணவ, மாணவியர் கல்லூரிகளுக்கு திரும்புவதற்கு வசதியாகவும் வரும் 26, 28 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள செய்முறைத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். அந்த நாட்களில் நடைபெற வேண்டிய செய்முறைத் தேர்வுகளை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், மாணவர்களுக்கும் வசதியான இன்னொரு நாளில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT