Published : 10 Oct 2019 06:24 PM
Last Updated : 10 Oct 2019 06:24 PM

தமிழ்மொழியை உலக அளவில் பரப்ப விருப்பம்: சீன ஊடகக்குழுவின் தமிழ்ப்பிரிவு தலைவர் கலைமகள் பேச்சு

நிகழ்ச்சியில் கலைமகள், சீனாவின் ஆசிய ஆப்பிரிக்க ஊடகப்பிரிவு தலைவர் சுன் ஜின்ஸி உள்ளிட்டோர் உள்ளனர். (படம் எல்.ஸ்ரீனிவாசன்)

சென்னை,

உலகளவில் தமிழ்மொழியை பரப்புவதில்தான் தனக்கு அதிகமான விருப்பம் இருப்பதாகவும், அதற்கான அனைத்து முயற்சிகளையும் சீன ஊடகக்குழு முன்னெடுக்கும் என்று சீன ஊடகக்குழுவின் தமிழ்ப்பிரிவு தலைவர் கலைமகள் தெரிவித்தார்.

சீன அதிபர் சென்னை வருவதையொட்டி, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்திய-சீன சந்திப்பு என்ற தலைப்பில் சீன ஊடக்ககுழுவின் தமிழ்ப்பிரிவு சார்பில் இன்று சீன வானொலி அறிவிப்பாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சீன ஊடகக்குழுவின் தமிழ்ப்பிரிவு தலைவர் கலைமகள் (ஹாவோஜியாங்), அமைச்சர் மஃபா பாண்டியராஜன், பத்திரிகையாளர் மாலன், இந்திய சீன நட்புறவு சங்கத்தின் தலைவர் ஜெய்சக்திவேல், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநர் தங்க காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் சீன ஊடகக் குழுவின் தமிழ்ப்பிரிவு வர்ணனையாளர்கள் பூங்கோதை, நிலானி ஆகியோரும் பங்கேற்று சீன வானொலி ரசிகர்களுடன் கலந்துரையாடினார்கள்.

சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் வென்ற ரசிகர்களுக்கு அமைச்சர் பாண்டியராஜன் பரிசுகளை வழங்கினார்.

விழாவில் வாழ்த்துரை வழங்கி சீன ஊடகக் குழுவின் தமிழ்ப்பிரிவு தலைவர் கலைமகள் பேசுகையில், " சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகவிட்ட பெருமையான தருணத்தில் இருக்கிறோம். உலகின் தொன்மையான கலாச்சாரம், பாரம்பரியம் கொண்ட இரு மொழிகள் இருக்கிறதென்றால் அது தமிழ்மொழியும், சீனமொழியும்தான்.

சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு வானொலியில் தொடக்கத்தில் குறைவாக இருந்த ரசிகர்கள் இன்று லட்சக்கணக்கில் பெருகி ஆதரவு அளித்து வருகிறார்கள். எங்களுக்கு ஆதரவு அளிக்கும் தமிழ்பேசும் மக்களுக்கு நன்றியுடன் இருப்போம். காலத்துக்கு ஏற்ப தமிழ்மொழியை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க எங்கள் வானொலியின் சேவையை மாற்றிக் கொண்டு வருகிறோம். ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வானொலி குறித்த பல்வேறு விஷயங்களையும் தொகுத்து வழங்கி வருகிறோம்.

தமிழில் உள்ள திருக்குறளையும், சீனாவின் தத்துவஞானி கன்பூசியஸ் தத்துவங்களையும் ஒப்பிட்டு மக்களுக்கு புரியும் வகையில் கானொலிகளை வெளியிட்டுள்ளோம். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வானொலியின் நிகழ்ச்சியை இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் ஏராளமான இளம் நட்சத்திர வர்ணனையாளர்களை அறிமுகம் செய்கிறோம்.

விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமைச்சர் பாண்டியராஜனை வரவேற்று, அவருடன் செல்பி எடுத்துக்கொண்ட தமிழ்பிரிவு தலைவர் கலைமகள்

தமிழ்மொழியை சீனாவில் மட்டுமல்லாது உலக அளவில் எங்கள் வானொலி மூலம் கொண்டு சேர்ப்பதுதான் என்னுடைய விருப்பம். அதற்கான பணிகளை முன்னெடுப்பேன்" எனத் தெரிவித்தார்

விழாவில் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் பேசுகையில், " சீனா மிகவும் அழகான தேசம். மொழியின் மீது அதிகமான பற்றுள்ள அந்த நாட்டு மக்கள். அவர்களின் மொழி மட்டுமல்லாமல் தாங்கள் கற்றுக்கொள்ளும் மொழி மீதும் அதிகமான பற்றுள்ளவர்களாக இருப்பார்கள்.

தமிழர்களுக்கும், சீனர்களுக்கும் இடையிலான தொடர்பு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. காஞ்சிபுரத்தில் இருந்து தேவத்தன் என்பவர் சீனா என்று தான் கற்றுக்கொண்டு கலைகளையும், மருத்துவங்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி இன்று ஜென் துறவிகளால் ஒருவராக போதி தர்மராக போற்றப்படுகிறார்.

நான் நடத்திவரும் நிறுவனத்தின் கிளையை சீனாவில் தொடங்க முயன்றபோது அந்த நாட்டு மாஃபாய் என்று பெயர் பதியவில்லை. மாஃபூ என்று பதிவிட்டார்கள். ஏன் என்று காரணம் கேட்டபோது, பெயர்கள் எங்கள் மொழியில்தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அந்த அளவுக்கு சீனர்கள் மொழிமீது பற்றும், ஆர்வமும் கொண்டிருக்கிறார்கள்.

சீன மொழியை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் விருப்பப் பாடமாக வைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும், அதற்காக சீனாவும் கோரிக்கை வைக்க வேண்டும். அதேபோல தமிழகத்திலும் சீன மொழிக்கான ஆய்வுத்துறை அமைக்கப்படும்.

தமிழ் மண்ணின் மீது மிகுந்த மரியாதை வைத்தும், பாதுகாப்பு நிறைந்தது தமிழகம் என்ற நம்பிக்கையில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நாளை மாமல்லபுரத்தில் சந்திக்க இருக்கிறார்கள்.

இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு இன்னும் வலுப்பெற்று நெருக்கமடைய வேண்டும். 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவும், 139 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் உலகின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x