Published : 09 Oct 2019 05:05 PM
Last Updated : 09 Oct 2019 05:05 PM
தூத்துக்குடி
பிரதமர் அறிவித்துள்ள ககன்யான் திட்டத்தை நோக்கி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய விண்வெளி மையத்தின் மஹேந்திரகிரி உந்தும வளாக மைய இயக்குனர் டி.மூக்கையா தெரிவித்துள்ளார்.
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இந்திய விண்வெளி மையத்தின் மஹேந்திரகிரி உந்தும வளாக மையத்தின் சார்பில் விண்வெளி கண்காட்சி இன்று (அக்.9) தொடங்கியது.
கண்காட்சியில் விண்வெளி ஆய்வுகள் படங்களுடன் இடம் பெற்றிருந்தன, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மாதிரிகளும் இடம் பெற்றிருந்தன, ராக்கெட்டுகள் செலுத்தப்படும் கிரையோஜினிக் இயந்திரங்கள் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன.
இன்று (அக்.9) தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்துரி தொடங்கி வைத்தார்.
இதற்கு மஹேந்திரகிரி உந்தும வளாக மைய இயக்குனர் டி.மூக்கையா தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அவர், "அக்டோபர் 4ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கொண்டாடப்படும் விண்வெளி வார விழாவை முன்னிட்டு இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. Gateway of the star என்ற தலைப்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த ஆராய்ச்சியின்படி விண்ணில் நிலவைத் தவிர நான்கு இடங்கள் மனிதன் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதாக அராய்ச்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
அதற்கேற்றபடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள விண்வெளித்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நான்கு இடங்களுக்கு செல்வதற்கு நிலவிலிருந்து எரிபொருள் நிரப்பி செல்லும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்ட வேண்டும்.
மாணவ, மாணவிகள் வரும் காலங்களில் உலக அளவில் பல நாடுகளின் செயற்கைகோள்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருங்காலங்களில் சுற்றுசூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் மண்ணென்னையில் இயங்கும் இயந்திரங்கள் வடிவமைப்புகள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அடுத்த கட்டமாக இந்திய விண்வெளி மையத்தில் பாரத பிரதமர் அறிவித்துள்ள மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2022ம் ஆண்டு அகஸ்ட் மாதம் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன" என்றார்.
நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி மையத்தின் முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ ஆர்.எம்.வாசகம், இஸ்ரோ எரிபொருள் மையத்தின் இணை இயக்குனர் அழகுவேலு, வஉசி கல்லூரி செயலர் ஏபிசிவீ. சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் சி.வீரபாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியை 70 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT