Published : 09 Oct 2019 12:59 PM
Last Updated : 09 Oct 2019 12:59 PM
ராமேஸ்வரம்
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை கடல்நீர் 100 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியது. கடல்நீர் உள்வாங்கியது தொடர்பாக பல்வேறு அச்சமூட்டும் செய்திகள் வெளியான நிலையில் இது வழக்கமானதே எனக் கூறுகின்றனர் அம்மாவட்ட மீனவர்கள்.
இது குறித்து மீனவர்கள் கூறும்போது, "வழக்கமாகவே ஆடி மாதம் தொடங்கி ஐப்பசி மாதம் வரை ராமநாதபுரத்தில் கடல் உள்வாங்கும் சம்பவம் இயல்பாகவே அவ்வப்போது நடைபெறும்.
இன்றும் அப்படித்தான் நடந்திருக்கிறது. கீச்சாங்காற்று வீசும்போது இப்படி நடைபெறுவது வழக்கம். வழக்கமாக நடப்பதுபோலவே இன்றும் சுமார் 100 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியுள்ளது.
இது மதியம் 3 மணிக்குப் பின்னால் இயல்புநிலைக்குத் திரும்பத்தொடங்கும். இரவுக்குள் சாதாரண நிலைக்கு கடல் திரும்பும்.
மீனவர்கள் இதனால் எந்த அச்சத்துக்கும் உள்ளாகவில்லை என்றும் உப்பூரில் மட்டுமே கடல் உள்வாங்கியுள்ளது, சங்குமால் பகுதியில் இன்று கடல் உள்வாங்கவில்லை" என்று ராமநாதபுர மாவட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படகுகளுக்கு ஏதும் சேதம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடல் உள்வாங்கியதால் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாக எழுந்த தகவலையும் மீனவர்கள் மறுத்தனர்.
கடல் உள்வாங்கியதால் இதுவரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதேயில்லை என்று கூறும் ரயில்வே அதிகாரிகள். காற்றின் வேகம் அதிகமிருந்தால் மட்டுமே ரயில் சேவை தடைபடும். கடந்த ஜூலை, ஆகஸ்டில் அப்படி இரண்டு, மூன்று முறை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT