Published : 15 Jul 2015 07:39 AM
Last Updated : 15 Jul 2015 07:39 AM

பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் டாமி ஃபுளூ மாத்திரைகளை தயார் நிலையில் வைக்கவேண்டும்: சுகாதாரத் துறை கூட்டத்தில் அறிவுறுத்தல்

பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த தேவையான டாமி ஃபுளூ மாத்திரை களை அனைத்து மருத்துவமனை களிலும் தயார் நிலையில் வைத் திருக்குமாறு தமிழக சுகாதாரத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவும் நோய்களை கட்டுப் படுத்துவது மற்றும் முன்னேற் பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக சுகாதாரத் துறை சார்பில் சென்னை அண்ணா சாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் வருமாறு:

மாநில எல்லைப் பகுதிகள், பேருந்து, ரயில் நிலையங்கள், பொது இடங்களில் சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப் பட்டு பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும். டெங்கு, சிக்குன்குனியா போன்றவற்றை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் உருவா கின்றன. ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் வீணான பொருட்களை அடுத்த 15 நாட்களுக்குள் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்.

எந்தப் பகுதியிலாவது மூன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், உடனே அதற்கான காரணத்தை கண்டறிந்து தடுக்க வேண்டும். காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு மருத் துவக் குழுக்கள் அனுப்பப்பட வேண்டும். தேவையான இடங் களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும். சிகிச்சை அளிக்க தேவையான ரத்த அணுக்கள் பரிசோதனைக் கருவி, மருந்துகள், ரத்தக்கூறுகள், ரத்தம் ஆகிய வற்றை போதிய அளவு இருப்பில் வைக்க வேண்டும். பன்றிக் காய்ச்சல் முழுமையாக குணமாக தேவை யானடாமி ஃபுளூ மாத்திரைகளை அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

நிலவேம்பு கசாயத்துக்கு ஏற்பாடு

டெங்கு காய்ச்சலை எலிசா பரிசோதனை முறையில் கண்டு பிடிக்க மாவட்ட அளவில் 60 பரிசோ தனை மையங்கள் செயல் படுகின்றன. அரசு மருத்துவ மனைகளில் நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு எளிதில் கிடைக்க வகை செய்யப் பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சலைக் கண்டறிய சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் உட்பட தமிழகத்தில் 6 சிறப்பு பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன. இவை தவிர புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு பரிசோதனை மையம் உட்பட 13 தனியார் மருத்துவ பரிசோதனை மையங்களும் செயல்படுகின்றன. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், மாவட்ட மருத்துவ மனைகளில் தனியாக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தகவல் தெரிவிக்க..

காய்ச்சல் பாதிப்பு குறித்த விவரங்களை 104 என்ற இலவச தொலைபேசி எண், 94443 40496 என்ற செல்போன் எண், 044-24350496 மற்றும் 044-24334810 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். தகவல் பெறப்பட்ட வுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x