Published : 09 Oct 2019 10:12 AM
Last Updated : 09 Oct 2019 10:12 AM
சென்னை
மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் சந்தித்து 3 நாட்கள் நடத்தும் பேச்சுவார்த்தை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகின் ஒட்டுமொத்த கவனமும் 11-ம்தேதி முதல் 12-ம் தேதிவரை மாமல்லபுரத்தில்தான் குவிந்திருக்கும். இதுவரை சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் சர்வதேச அளவில் மாநாடுகளில் பலமுறை சந்தித்துள்ளனர்.
இருப்பினும், அதிகாரபூர்வமற்ற முறையில் நட்புரீதியாக இருவரும் சந்திப்பது இது 2-வதுமுறை. இதற்கு முன் கடந்த ஆண்டு சீனாவின் ஹூபி மாகாணத்தில் உள்ள உஹான் நகரில் முதல் சந்திப்பு நடந்தது.
இந்தச் சந்திப்பில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வரை விமானத்தில் வந்து அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்ல உள்ளார். ஆனால், சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தனது பிரத்யேக கார் மூலமாகவே, மாமல்லபுரம் செல்ல உள்ளார். சீனப் பிரதமருடன் ஏறக்குறைய 200 பேர் வர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை வந்த கார்கள்
இதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் சீனாவிலேயே மிகவும் விலை உயர்ந்த, அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கறுப்பு நிறத்தில் 4 கார்களும், பொருட்களும் போயிங் 747 விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று மாலை வந்தன.
11-ம் தேதி காலையில் சென்னை வரும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்கிற்கு மத்திய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின் ஜி ஜின்பிங் தனது பிரத்யேக காரில் மதிய உணவுக்காக ஐடிசி சோழா ஹோட்டலுக்குச் சென்றுவிட்டு அதன்பின் மாமல்லபுரம் செல்கிறார்.
அனைவரின் கவனத்தையும் இப்போது ஈர்த்திருப்பது சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் அதிநவீன, விலை உயர்ந்த, அதிக வசதிகள் கொண்ட சொகுசுக் கார்தான். சீன அதிபர் எந்தக் காரைப் பயன்படுத்துகிறார், அதன் விலை என்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
வழக்கத்தை மாற்றிய ஜி ஜின்பிங்
சீனாவில் அதிபராக ஜி ஜின்பிங் வருவதற்கு முன்பு வரை இருந்த அதிபர்கள், பிரதமர்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனத் தயாரிப்பு கார்களைப் பயன்படுத்தி வந்தனர். சீனாவின் அதிபர், பிரதமர் யாராக இருந்தாலும் எந்த நாட்டுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றாலும் அந்நாட்டு அரசு அளிக்கும் காரில்தான் செல்வதைத்தான் வழக்கமாக வைத்திருந்தார்கள்.
ஆனால், 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும், நாட்டின் அதிபராகவும் ஜி ஜின்பிங் வந்தபின் ஒட்டுமொத்த நடைமுறையை மாற்றினார்.
பிரத்யேகக் கார் 'ஹாங்கி'
சீன அதிபர் பயணிக்க மட்டும் தனியாக காரைத் தயாரிக்க எப்ஏடபிள்யு(FAW) கார் தயாரிப்பு நிறுவனத்திடம் ஜி ஜின்பிங் கூறினார். இதற்காக சீனாவில் பழமையான, மிகப்பெரிய உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான எப்ஏடபிள்யு நிறுவனம் (Hongqi) 'ஹாங்கி எல்-5 ரக காரை சீன அதிபருக்காக உருவாக்கியது.
'ஹாங்கி' என்பது சீன மொழியில் 'சிவப்புக் கொடி' என்று பொருள். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ கார் 'ஹாங்கி' இப்போதுவரை இருக்கிறது. எப்ஏடபிள்யு நிறுவனம் கடந்த 1958-ம் ஆண்டு முதல் 'ஹாங்கி' ரக சொகுசுக் கார்களைத் தயாரித்து வந்தபோதிலும் இப்போது அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் 'ஹாங்கி எல்5 சீர்ஸ்' கார் 4-வது தலைமுறையினருக்குரிய கார்.
3 வகைக் கார்கள்
இந்த 'ஹாங்கி எல்-5' ரக காரைத்தான் இப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தி வருகிறார். எப்ஏடபிள்யு நிறுவனம் 'ஹாங்கி எல் சீரிஸ்' வகையில் 3 வகை கார்களை தயாரிக்கிறது. இதில் கடந்த 2009-ம் ஆண்டு 'ஹாங்கி எல்9' என்ற மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த கார்கள் அணிவகுப்புக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.
2-வது மாடலான 'ஹாங்கி-எல்7' என்ற காரை கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இறுதியாக 'ஹாங்கி எல்5' மாடல் காராகும். இந்த காரைத்தான் அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்துகிறார். 'ஹாங்கி எல்5' வகை கார்கள் அரசுக்கு மட்டும் தயாரித்து வழங்கப்படும். சீனாவில் மிக விலை உயர்ந்த காராக இந்த கார் இருக்கிறது. அணி வகுப்புகளுக்கு மட்டும் 'ஹாங்கி எல்9' ரக கார்களும், மக்கள் பயன்பாட்டுக்கு 'ஹாங்கி-எல்7' ரக கார்களும் பயன்படுத்தப்படும்.
காரின் விலை எவ்வளவு
சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் 'ஹாங்கி எல்-5' ரக கார் சீனாவிலேயே மிகவும் விலை உயர்ந்த காராகும். இதன் விலை 8 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ.5.60 கோடி).
காரின் அமைப்பு
மெர்சடிஸ், பென்ட்லி, ரோல்ஸ் ராய்ஸ் ஆகிய உலகின் பிரபல நிறுவனங்களின் காரைப் போன்று 'ஹாங்கி எல்5' ரக காரும் உருவத்தில் மிகப்பெரியது, சொகுசானது. இதன் எடை 3,150 கிலோ. ஏறக்குறைய 20 அடி நீளமுடையது. 2 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்டது. தரையில் இருந்து வீல் பேஸ் 3.4 மீட்டர் உயரம் கொண்டது.
மெர்டசிஸ் நிறுவனத்தின் சமீபத்திய தாயாரிப்பான 'மேபாக்எஸ் 600' காரின் எடை, 2,390 கிலோதான. ஆனால், அதைக்காட்டிலும் எடையிலும், 'வீல்பேஸிலும்' 'ஹாங்கி எல்5' ரக கார் மிகப்பெரியது.
சிறப்பு அம்சங்கள்
* ஹாங்கி எல் 5 ரக காரில் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்கள் அதிபருக்கு மட்டுமே உருவாக்கப்பட்டதால், பல விஷயங்களை அந்த நிறுவனம் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிடவில்லை.
* 'ஹாங்கிஎல் 5' ரக காரில் 408 குதிரைத்திறன் இன்ஜின், 12 வால்வுகளைக் கொண்ட இன்ஜின், 6 ஸ்பீட் கியர்பாக்ஸ், அனைத்து சக்கரங்களையும் அதிவேகமாகச் சுற்றவைக்கும் வகையில் கியர் பாக்ஸில் இருந்து சக்தி சக்கரங்களுக்கு செலுத்தும் வசதி.
* 10 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை அடையும் திறன் படைத்த 12 வால்வுகளைக் கொண்ட இன்ஜின்.
* 105 லிட்டர் பெட்ரோல் அல்லது கேஸ் நிரப்பிக்கொள்ளும் வசதி உள்ளது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 500 மைல்கள் வரை பயணிக்க முடியும்.
* காரின் உட்புறம் ரோஸ் உட் பேனல்களால் அலங்கரிக்கப்பட்டு, கிரீம் நிறத்திலான தோலில் செய்யப்பட்ட இருக்கைகளைக் கொண்டது.
* அதிக வேகத்தில் செயல்படும் ஏசி, செயற்கைக்கோள் தொலைபேசி வசதி இருக்கிறது.
* சாலையில் கார் செல்லும் போது எந்த நாட்டுத் தலைவருடன் தடையின்றி தெளிவாகப் பேசும் வகையில் தொலைத் தொடர்புக் கருவிகள் இருக்கின்றன
* நான்கு கதவுகளும் குண்டு துளைக்காத, சிறிய ரக ஏவுகணைகள் மூலம் தாக்கினாலும் கார் எந்தவிதமான சேதமும் ஏற்படாத வகையில் காரின் சேஸ், 'உருவம்', வடிவமைக்கப்பட்டுள்ளது.
* காரின் எந்தக் கண்ணாடியையும் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்க முடியாத அளவுக்கு வலிமையான கண்ணாடியாகும்.
* காரின் ஓரத்தில் ஹாங்கியின் சிவப்புக் கொடி சின்னம் வைக்கப்பட்டு இருப்பதுதான் காரின் சிறப்பு அம்சம்.
* காரின் பின்புறத்தில் உள்ள ஒளிரும் விளக்குகள் சீனாவின் பாரம்பரிய 'லான்டர்ன்' விளக்குபோல் இருக்கும். காகிதத்தால் வடிவமைக்கப்படும் 'லான்ட்ரன் விளக்குகள்' சீனாவின் பண்டிகை காலத்தில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் உணர்த்தும் விளக்குகளாகும். அதை காரில் அடையாளமாக அதிபர் பயன்படுத்துகிறார்.
* காரின் பக்கவாட்டில் 'ஹாங்கி' என்ற எழுத்து பொறிக்கப்பட்டு இருக்கும். இந்த 'ஹாங்கி' என்ற எழுத்து சீனாவின் 'மாவோ'வின் கையெழுத்துபோன்று எழுதப்பட்டு இருக்கும்.
* ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி முல்சானே, மெர்சடிஸ் என பல்வேறு அதிசொகுசுக் கார்கள் இருந்தாலும், ஹாங்கி எல்5 அனைத்திலும் பிரத்யேகமானது என்று கார் தயாரிக்கும் எப்ஏடபிள்யு நிறுவனம் தெரிவித்துள்ளது.
போத்திராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT