Published : 08 Oct 2019 09:33 PM
Last Updated : 08 Oct 2019 09:33 PM
சென்னை பெருங்களத்தூரில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தைக் கடந்த பெண் மென் பொறியாளர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர், மித்ரா (25). மென் பொறியாளரான இவர், பெருங்களத்துாரில் தங்கி, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில், மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.
சமீபத்தில் வேலை தொடர்பாக வெளிநாடு செல்ல தேர்வாகி சென்றுவிட்டு, நேற்று காலை விமானம் மூலம், சென்னை திரும்பினார். இன்று காலை வழக்கம்போல் பணிக்குச் செல்வதற்காக காலை 9 மணியளவில், வீட்டிலிருந்து கிளம்பி பெருங்களத்துார் ரயில் நிலையம் வந்துள்ளார். ரயில்வே தண்டவாளத்தை கடந்து மறுபுறம் செல்லவேண்டும்.
தண்டவாளத்தைக்கடக்க படியை பயன்படுத்தாமல் ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளார். அதற்கு முன் அவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடந்துள்ளார். அந்த தண்டவாளத்தில் அவ்வழியாக செல்லும் விரைவு ரயில் வந்துள்ளது. பேச்சு சுவாரஸ்யத்தில் ரயில் வருவதை கவனிக்கவில்லை. ஹாரன் அடித்தும் கவனிக்காத நிலையில் வேகமாக வந்த, விரைவு ரயில் மித்ரா மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து, தகவலறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீஸார், மித்ரா உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போன் பேசும் ஆர்வத்தால் ரயிலை கவனிக்காததால் மென் பொறியாளர் உயிர் அநியாயமாக பறிபோனது.
கடந்த ஆண்டுகளில் இதுபோன்று தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகளில் ரயில் வருவதை கவனிக்காமல் உயிரிழப்பதில் செல்போனில் பேசிக்கொண்டு தண்டவாளத்தைக்கடப்பதும், ஹெட்போனை போட்டுக்கொண்டு பாட்டுக்கேட்டுக்கொண்டே அலட்சியமாக தண்டவாளத்தை கடப்பதும் காரணம் என்கின்றனர் ரயில்வே போலீஸார்.
தண்டவாளத்தை கடப்பது தவறு, தண்டனைக்குரிய குற்றம்.
மறந்தும் செல்போனை உபயோகிப்பது கூடாது. உங்களுக்கு வரும் செல்போன் அழைப்பு மரணத்திற்கான அழைப்பாக இருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT