Last Updated : 08 Oct, 2019 05:12 PM

 

Published : 08 Oct 2019 05:12 PM
Last Updated : 08 Oct 2019 05:12 PM

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை நீர் திறப்பு

ஆண்டிபட்டி

வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் இதன் நீர்மட்டம் 61அடியை நெருங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து பாசனத்திற்காக நாளை (அக்.9) நீர் திறக்கப்பட உள்ளது.

ஜூனில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக ஆகஸ்ட்டில் துவங்கியது. இருப்பினும் பருவமழை தொடர்ந்து கனமழையாக பெய்ததால் பெரியாறுஅணைக்கு குறுகிய நாட்களிலே நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131 அடி வரை உயர்ந்தது. வினாடிக்கு சராசரியாக 1400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த வைகையில் நீரோட்டம் ஏற்பட்டு வைகைஅணையின் நீர்மட்டமும் உயரத் துவங்கியது.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இதே நிலை இருந்ததால் பல்வேறு சிற்றாறுகளில் நீர் பெருக்கு ஏற்பட்டது.

வராகநதி, கொட்டகுடி உள்ளிட்ட வைகையின் பல்வேறு துணை ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. இந்த நீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து வைகை அணைக்குச் சென்றதால் அதன் நீர்மட்டம் உயரத்தொடங்கியது.

கடந்த மாதம் 53 அடியில் இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று 60.60அடியை எட்டியது.

இன்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 198கனஅடிநீர்வரத்து உள்ளது. 860கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதாலும், வடகிழக்கு பருவமழை மூலம் மேலும் இதன் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும் அணை இந்த ஆண்டு முழுக்கொள்ளளவான 71அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக நாளை வைகைஅணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒருலட்சத்து 5ஆயிரத்து 2 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும். இந்நீர் தொடர்ந்து 120நாட்களுக்கு வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரியாறு அணையைப் பொறுத்தளவில் தென்மேற்குப் பருவமழை முடிவடைந்ததால் அணைக்கு நீர் வரத்து வெகுவாய் குறைந்தது.

கடந்த வாரம் 128அடியாக இருந்த இதன் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து நேற்று 124.50அடியை எட்டியது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு 714கனஅடிநீர் வரத்தும், வெளியேற்றம் ஆயிரத்து 400 கனஅடியாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x