Published : 08 Oct 2019 04:44 PM
Last Updated : 08 Oct 2019 04:44 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் பெற குழந்தைகள் பெற்றும் காத்திருக்கும் பயனாளிகள்

திண்டுக்கல்

அரசின் திருமண உதவித்திட்டமான தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் இரண்டரை ஆண்டுகளாக பயனடைய முடியாமல் குழந்தைகள் பெற்றும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக நலத்துறை சார்பில் திருமண உதவித்திட்டமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு எட்டு கிராம் தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற திருமணத்திற்கு முன்பே திருமண பத்திரிக்கையை சான்றாக இணைத்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் சான்றுபெற்று சமூக நலத்திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை விண்ணப்பித்தவர்களுக்கு திருமண உதவித்தொகையாக 8 கிராம் தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதன்பின் விண்ணப்பித்து கடந்த மாதம் வரை 10000 பேர் காத்துள்ளனர். இவர்களுக்கு இதுவரை தங்கம் மற்றும் உதவித்தொகை கிடைக்கவில்லை. 2017-ம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு திருமணமாகி குழந்தைகளும் பெற்று, குழந்தைகளுக்கு ஒரு வயதும் கடந்துவிட்டது. திருமண உதவித்தொகையை விரைவில் வழங்கவேண்டும் என விண்ணப்பித்து காத்துள்ளவர்கள் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலர் முத்துமீனாள் கூறியதாவது:

அரசிடமிருந்து உதவித்தொகை கிடைக்க, கிடைக்க விண்ணப்பித்தவர்களில் மூப்பு அடிப்படையில் திருமண உதவித்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2017 ஜனவரி வரை விண்ணப்பித்தவர்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது. கடந்த மாதம் வரை பத்தாயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. தற்போது நான்காயிரம் பேருக்கு திருமண உதவித்தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

இது விரைவில் அமைச்சர் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. தற்போது கிடைத்துள்ள நிதியின் மூலம் 2017 டிசம்பர் வரை விண்ணப்பித்தவர்களுக்கு திருமண உதவித்திட்டம் முழுமையாக வழங்கப்பட்டுவிடும்.

தொடர்ந்து அடுத்தடுத்து அரசு நிதி ஒதுக்கும்பட்சத்தில் வரிசையாக அனைவருக்கும் வழங்கப்படும். அதேநேரத்தில் விதவை திருமணம், விதவைகள் மகள் திருமணம், கலப்பு திருமணம் என சிறப்பு பிரிவில் விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x