Published : 08 Oct 2019 01:56 PM
Last Updated : 08 Oct 2019 01:56 PM
மாமல்லபுரம்
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகை தர உள்ளதால் மாமல்லபுரத்தில் சுற்றுலாத் தல வளாகத்தினுள் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இந்தியா-சீனாவுடனான வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக, மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்துப் பேச உள்ளனர். இதற்காக, இரு தலைவர்களும் சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு வரும் 11 மற்றும் 12-ம் தேதி வருகை தர உள்ளனர். மேலும், பல்லவ மன்னர் கால கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களை நேரில் பார்வையிட உள்ளனர்.
இதனால், கலைச்சின்னப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாமல்லபுரம் வருகை தரும் பிரதமர் மற்றும் சீன அதிபர் பார்வையிட உள்ள கலைச் சின்னங்கள் மற்றும் வளாகங்களைப் புதுப்பித்து, அழகூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்புக் காரணங்களுக்காக சுற்றுலாத் தலங்களான கடற்கரைக் கோயில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்ட சிற்பங்களின் வளாகத்தினுள் செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று (அக்.8) முதல் அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இன்று முதல் மேற்கண்ட இரு தலைவர் சந்திக்கும் நிகழ்ச்சி முடியும் வரையில் இந்த உத்தரவு தொடரும் மற்றும் மேற்கண்ட சுற்றுலாத் தல வளாகங்கள் தொல்லியல் துறையின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் என ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டுத் தலைவர்களும் வருகை தர உள்ளதால், மாமல்லபுரத்தில் உச்சகட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற மீனவ கிராமங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர ஈசிஆர் சாலை மூலம் மாமல்லபுரம் வரும் வாகனங்களை, சோதனையிட்டு, பதிவெண்கள், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்த பின்னரே மாமல்லபுரம் நகருக்குள் வாகனங்களை போலீஸார் அனுமதிக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சுற்றுலாத் தல வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், துப்பாக்கி ஏந்திய போலீஸார் அனைத்து இடங்களிலும் பணியில் உள்ளனரா எனவும் போலீஸார் எண்ணிக்கை குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.
தலைவர்களை வரவேற்பதற்காக, தமிழக அரசு சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று (அக்.7) ஆய்வு மேற்கொண்டார். இதில், அலங்கார வளைவுகள் மற்றும் சாலையோரங்களை அழகூட்டுவதற்காக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும், பணிகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக செங்கல்பட்டு கோட்டாட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT