Published : 08 Oct 2019 01:19 PM
Last Updated : 08 Oct 2019 01:19 PM
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மாவடி கிராம மக்கள், தங்கள் பகுதியில் பல காலமாகவே அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தராததைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வரும் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாங்குநேரி தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அத்தொகுதிக்கு உட்பட்ட மாவடி கிராம மக்கள், கருப்புக் கொடி ஏற்றி, இடைத்தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமத்தில், சாலை, பாலம், மற்றும் குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, அக்கிராம மக்கள், இடைத்தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தியும், முடிவு ஏற்படாததால், போராட்டத்தை தொடர்கின்றனர்.
இதற்கிடையில், நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதற்கட்ட பிரச்சாரத்தை நாளை (அக்.9) தொடங்குகிறார்.
நாளை மாலை 4 மணிக்கு அவர் தனது பிரசாரத்தை ஏர்வாடியில் தொடங்குகிறார். திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, கீழகருவேலங்குளம், சடையமான்குளம் விலக்கு ஆகிய இடங்களிலும் பொது மக்களிடம் பேசி வாக்கு சேகரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மாவடி கிராமமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT