Published : 16 Jul 2015 08:18 AM
Last Updated : 16 Jul 2015 08:18 AM

அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறை

அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தற்போது பணிபுரியும் பள்ளியில் 3 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதலுக்கான கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடத்தப்படும். இடமாறுதல் பெறும் ஆசிரியர்கள் ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கியதும் புதிய பள்ளிகளில் பணியில் சேர்ந்துவிடுவர்.

ஆனால், இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் தொடங்கியும், பொது இடமாறுதலுக்கான கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ளார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 3 ஆண்டுகள் (முன்பு ஓராண்டு என்றிருந்தது) பணிபுரிந்திருக்க வேண்டும். முற்றிலும் பார்வையிழந்தவர்கள், சொந்த பாதுகாப்பு கருதும் ராணுவ பணியாளரின் மனைவி, இதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகள், விதவைகள், 40 வயதை கடந்த திருமணம் செய்துகொள்ளாத முதிர்கன்னிகள், மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளின் பெற்றோர், கணவன் மனைவி இருவரில் ஒருவர் ஆசிரியராக இருப்பின் கணவர் பணிபுரியும் இடத்துக்கோ அல்லது மனைவி பணிபுரியும் இடத்துக்கோ மாறுதல் கோருபவர்கள் ஆகியோருக்கு மட்டும் மேற்கண்ட விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கலாம்.

கலந்தாய்வின்போது ஒரு பணியிடத்துக்கு ஒருவருக்கு மேல் மாறுதல் கோரினால் மேற்கண்ட சிறப்பு பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசாணையை தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரும், தொடக்கக்கல்வி இயக்குநரும் கலந்தாய்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவார்கள். அதன்பிறகு இடமாறுதல் கோரும் ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும்.

அரசுக்குக் கோரிக்கை

இடமாறுதல் கலந்தாய்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய நடைமுறை குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் கூறும் போது, ‘‘ஒரு பள்ளியில் 3 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதிமுறை ஆசிரியர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். முன்பு இருந்து வந்ததைப் போன்று பணிக்காலத்தை ஓராண்டாக நிர்ணயிக்க வேண்டும்’’ என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x