Published : 08 Jul 2015 10:38 AM
Last Updated : 08 Jul 2015 10:38 AM
தமிழகத்தில் முதன்முறையாக திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நாட்டுப்புறவியல் ஆவ ணக் காப்பகம் அமைய உள்ளது.
தமிழகத்தில் 36 மலைவாழ் பழங் குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் அழிவின் விளிம்பில் உள்ள பளியர், மன்னாடி, முதுவர், கானிக்காரர் உள்ளிட்ட 8 மலைவாழ் மக்களுடைய மரபு சார்ந்த அறிவு முறைகள், மருத்துவம், பழமொழி கள், விளையாட்டு, வாழ்வியல் சார்ந்த சடங்குகள், உணவு பழக்கவழக்கம், இசை, வேளாண் கருவிகள் பற்றி ஆய்வுசெய்து ஆவ ணப்படுத்த, காந்திகிராம பல்கலைக் கழகத்தின் தமிழ் துறைக்கு, பல் கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சிறப்பு நிதியுதவி திட்டத்தில் 70 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இந்த ஆய்வுக்காக, தமிழ் பேராசிரியர்களுக்கு உதவியாக 2 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆராய்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ப.பத்மநாப பிள்ளை, துணை ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் துறைத் தலைவர் வ.ராசரத்தினம், பேராசிரியர் ஒ.முத்தையா ஆகியோர் கூறியதாவது:
‘‘தென் தமிழகத்தில் மலைவாழ் மக்களின் பண்பாடு, நாட்டுப்புறவியல் பற்றி இதுவரை தெளிவான ஆய்வு நடத்தப்படவில்லை. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் இந்த மலையைச் சார்ந்த மாவட்டங்களில் கவனிக்கப்படாத 8 பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்களுடைய வாழ்வியலை பதிவு செய்யவும், அழிந்து வரக் கூடிய இந்த மக்களுடைய பண் பாடு, கலாச்சாரத்தை மீட்டெடுக் கவும் இந்த ஆராய்ச்சி மேற் கொள்ளப்படுகிறது.
நாட்டுப்புற இசை மரபு, கை வினைக் கலைகள், புழங்கு பொருட்கள், மரபு சார்ந்த அறிவு உள்ளிட்ட தலைப்புகளில் 45 ஆண்டுகள் ஆராய்ச்சி தொடர வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு ஐந்து ஆண்டு களுக்கு ஒருமுறையும், ஆராய்ச்சியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் பற்றி பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
முதல் ஐந்து ஆண்டுகள் வரை நடந்த ஆய்வில் சேகரிக்கப்படும் மலைவாழ் மக்களுடைய தகவல்கள் ஆவணப்படுத்தப் படுகின்றன.
இந்த ஆவணங்களைப் பாதுகாக்கவும், வருங்கால மாணவர்கள் அவற்றை தெரிந்து கொள்ளவும் தமிழகத்திலேயே முதன்முறையாக காந்திகிராம பல்லைக்கழகத்தில் 11 ஏக்கரில் நாட்டுப்புறவியல் ஆவணக் காப்பகம் உருவாக்கப்படுகிறது.
இந்த ஆவணக் காப்பகம் மூலம், மலைவாழ் கிராமங்களில் பழங்காலப் பண்பாடு, தொழில் நுட்பம், தொழில் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.’’
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
‘மறைந்துபோன வாழ்வியல் கலாச்சாரம்’
இன்று மலைவாழ் மக்கள் சாதாரண நிலத்துக்கு இடம்பெயர்ந்து வாழ பழகிக் கொண்டனர். இந்த மலைவாழ் பெண்களுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய அவர்கள் சமூகம் அனுமதிப்பதில்லை. அவர்களுடைய கணவர், மாமியாரே சுகப் பிரசவம் பார்க்கின்றனர். மருத்துவர்களே அதை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். மரபு சார்ந்த அவர்களுடைய இந்த மருத்துவ அறிவும், தற்போதைய நவீன மருத்துவ அறிவும் ஒன்று சேரும்போது, சிறப்பாக இருக்கும் என்பதால், அது சார்ந்த ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.
சங்க இலக்கியத்தில் இருந்த மலைவாழ் மக்களின் பழக்கவழக்கங்கள், இன்றும் இந்த மக்களிடம் இருக்கிறது. அதை பாதுகாப்பதற்காகவும், எதிர்காலத்துக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதற்காக இந்த ஆராய்ச்சி முடிவுகளை பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில், ஒவ்வொரு பருவ காலத்துக்கும் ஒரு விளையாட்டை விளையாடினர். நொண்டியடித்து விளையாடுவதன் மூலம், அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளின் உணர்வை புரிந்துகொள்ள முடிந்தது.
கண்ணாமூச்சி விளையாடியதன் மூலம் பார்வையற்றவர்களின் உணர்வை அறிந்து கொள்ள முடிந்தது. பழங்கால மக்களுடைய வாழ்வியல் கலாச்சாரம் மறைந்துவிட்டதால் இப்போது சிறுவர்களிடம் சேர்ந்து விளையாடும் பழக்கம் மறைந்து வருகிறது என்று ஆராய்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT