Published : 04 Oct 2019 08:53 PM
Last Updated : 04 Oct 2019 08:53 PM
காரைக்குடி
உள்ளாடை விற்பனை சரிவு பொருளாதார வீழ்ச்சியைக் காட்டுகிறது என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நெறிக்கும் வகையில், அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை என்ற பெயரில் தனிநபர் சுதந்திரத்தை பறிக்கின்றனர். ப.சிதம்பரம் அரசை தொடர்ந்து விமர்சித்ததால், அவரது புகழை சிதைக்கவே கைது நடவடிக்கை மேற்கொண்டனர். அவர் மீதே நடவடிக்கை எடுத்ததால் மற்றவர்கள் பயப்படுகின்றனர்.
நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லை என்றால் மேல்முறையீடு தான் செய்வோம். விமர்சிக்க மாட்டோம். கார் விற்பனை மட்டுமின்றி உள்ளாடை விற்பனையும் தான் சரிந்துள்ளது. பொதுவாகவே உள்ளாடை விற்பனை சரிந்தாலே, அது பொருளாதார வீழ்ச்சியை தான் காட்டும்.
நிறுவனங்களுக்கு வரியை குறைப்பதால் பொருளாதார வீழ்ச்சி மாறாது. அது நிறுவனங்களுக்கு தான் லாபம். அனைத்து நிறுவனங்களும் கடனில் இருப்பதால், கூடுதல் லாபத்தை கடன் அடைக்க தான் பயன்படுத்துவர். மாறாக தனிநபர் வருமானவரி மற்றும் ஜிஎஸ்டியை குறைத்தால் பொருளாதாரம் ஏற்றம் பெறும்.
அரசுக்கு யோசனை கூறிவோரை தேச விரோதி என்கின்றனர். ‘ஆமாம் சாமி’ சொல்கிறவர்களை தான் வைத்து கொள்கின்றனர். மத்திய அரசின் நடவடிக்கை காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எதிர்த்து கொண்டு தான் இருக்கின்றன. அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் விமர்சிக்க பயப்படுகின்றனர். தற்போது இந்தியாவில் நாசிச ஆட்சி தான் நடக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தலுக்கும் எங்கள் கூட்டணி தயாராக உள்ளது. இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும். அரசின் நடவடிக்கையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்த தயக்கம் காட்டுகின்றனர். அவர்கள் உணர்வுகளை தேர்தலில் தான் காட்டுவர்.
அரசு பேனர் வைத்தால் கீழே விழாதா? என்பது தெரியவில்லை. மக்களவை தேர்தலில் தோற்றபிறகு அதிமுக அரசுக்கு ஆட்சி செய்ய உரிமை இல்லை. தமிழகத்தில் பாஜகவை தவிர எந்த கட்சியும் இந்தி திணிப்பை ஏற்காது. கீழடி அகழாய்வை தமிழக அரசு நடத்த வேண்டாம்.
அதை மத்திய அரசு தான் நடத்த வேண்டும். அதில் கிடைத்த தொல்பொருட்கள் வைக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT