Published : 04 Oct 2019 05:56 PM
Last Updated : 04 Oct 2019 05:56 PM
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே கணவரின் மதுப்பழக்கத்தால் விரக்தியடைந்த மனைவி, தனது 2 குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள மலை கிராமமான கொடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பசவராஜ் (35). இவரது மனைவி நாகம்மா (26). இவர்களது குழந்தைகள் பிரேமா (7), பிரசாந்த் குமார் (3).
நாகம்மா தனது மகன் மற்றும் மகளுடன் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை பெலமரபோடு என்கிற இடத்தில் கிணறு ஒன்றில் நாகம்மா அவரது மகள் பிரேமா, மகன் பிரசாந்த் குமார் ஆகியோர் சடலமாக மிதந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் 3 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, ''நாகம்மாவின் கணவர் பசவராஜுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவர் குடும்பம் நடத்த வீட்டிற்குப் பணம் கொடுக்காமல் இருந்து வந்தார்.
இதன் காரணமாக நாகம்மா கூலி வேலைக்குச் சென்று அதில் கிடைத்த வருமானத்தில் குழந்தைகளைக் காப்பாற்றி வந்தார். இது தொடர்பாக கணவன் -மனைவி இடையே ஏற்கெனவே பிரச்சினை இருந்தது. மேலும் தினமும் குடித்து விட்டு வரும் பசவராஜ் வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மன உளைச்சல் அடைந்த நாகம்மா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
தான் இறந்து விட்டால் தனது குழந்தைகளை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என எண்ணிய நாகம்மா, தனது மகள் பிரேமா, மற்றும் மகன் பிரசாந்த் ஆகியோரைக் கிணற்றில் தூக்கி வீசிக் கொன்றுள்ளார். அதைத் தொடர்ந்து தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது'' என்றனர்.
மதுவால் ஒரு குடும்பமே சீரழிந்த சம்பவம் தேன்கனிக்கோட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT