Published : 04 Oct 2019 05:18 PM
Last Updated : 04 Oct 2019 05:18 PM

மணிரத்னம் மீதான தேசத்துரோக வழக்கு: என்ன காரணம் என்று தெரியவில்லை- பொன். ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு தரும் என, தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக ஆதரவை கோருவதற்காக இன்று (அக்.4) மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து கலந்தாலோசித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாஜக பணியாற்றுகிறது. இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாக பாஜக பணியாற்றும். இந்த தேர்தலில் பாஜகவின் ஆதரவை, அதிமுக மூத்த நிர்வாகிகள் பாஜகவின் அகில இந்திய தலைமையிடம் பலமுறை தொடர்புகொண்டு உறுதி செய்திருக்கின்றனர்.

இன்று அமைச்சர் ஜெயக்குமார் யார், யாரெல்லாம் பாஜக தரப்பில் பிரச்சாரத்திற்கு செல்கின்றோம் என்பதை அறிய இங்கு வந்தார். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. ஏற்கெனவே இருக்கும் கூட்டணி என்பதால், எந்தவித இடர்பாடும் இல்லாமல் பேச்சுவார்த்தை அமைந்தது. விக்கிரவாண்டியில் கட்டாயமாக திமுக தோற்கடிக்கப்பட வேண்டும். நாங்குநேரியில் காங்கிரஸ் துடைத்தெறியப்பட வேண்டும். அந்த தொகுதி மக்கள் அதனை உறுதி செய்வார்கள்.

யார், யார் எந்த தொகுதிக்கு பாஜக சார்பில் செல்ல வேண்டும் என்ற பட்டியலை தயார் செய்து அதிமுகவிடம் கொடுப்போம்," என தெரிவித்தார்.

இதையடுத்து அதிமுக - பாஜக இடையே பூசல் என்ற செய்தி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதிமுக சார்பில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் சொல்லப்படவில்லை. பாஜக சார்பிலும் யாரும் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளையும் சொல்லவில்லை. இடைவெளி உருவாகவில்லை. மக்களவைத் தேர்தல் சமயத்தில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடைபெற்றன. இப்போது கிளை, மாவட்ட, மண்டல், மாநில தேர்தல் நடைபெறுகிறது. இப்போதும் எங்களுக்கு முக்கியமான பணிகள் இருக்கின்றன. எனினும், நேரம் ஒதுக்கி பிரச்சாரத்திற்கு செல்கிறோம், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்யப்படும்," என கூறினார்.

இயக்குநர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, "என்ன காரணம் என தெரியவில்லை. முழு விவரங்கள் தெரியாமல் கருத்து சொல்ல முடியாது," என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x