Published : 03 Oct 2019 05:36 PM
Last Updated : 03 Oct 2019 05:36 PM
திருப்புவனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு சுவர்களை சிலர் சேதப்படுத்தியதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. இதுவரை 52 குழிகள் தோண்டப்பட்டு மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்பு காசுகள், உணவு குவளை உட்பட 750-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வில் அதிகளவில் சுவர்கள் கிடைத்துள்ளன.
அகழாய்வுப் பணிகள் செப்.30-ம் தேதி முடிவடைய இருந்தநிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டன. இருவாரங்களுக்கு முன் கீழடி 4-ம் கட்ட அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதன்மூலம் கீழடி நாகரீகம் 2,600 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்துள்ளது.
இதனால் கீழடி அகழாய்வு மீதான ஆர்வம் தமிழர்களிடம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அகழாய்வை காண கீழடியில் குவிந்து வருகின்றனர். காலை 10 முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சில அமைப்புகளைச் சேர்ந்த சிலர் தடுப்புகளை மீறிச் சென்று அகழாய்வு சுவர்களை சேதப்படுத்தினர்.
இதுகுறித்து தொல்லியத்துறையினர் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து எஸ்பி ரோஹித்நாதன் இன்று(அக்.3) கீழடியை ஆய்வு செய்தார். பிறகு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து போலீஸாருடன் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து கீழடியில் ஒரு எஸ்.ஐ தலைமையில் 10 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட எஸ்.பி. உத்தரவிட்டார். மேலும் இனி அகழாய்வைக் காண அரை மணி நேரத்திற்கு ஒருமுறை 50 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். அவர்கள் முருகேசன் நிலத்தில் தோண்டிய குழிகளை மட்டுமே காண முடியும். மற்றவர்களது நிலங்களில் தோண்டிய குழிகளைப் பார்க்க அனுமதியில்லை என பார்வையாளர்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT