Published : 03 Oct 2019 05:09 PM
Last Updated : 03 Oct 2019 05:09 PM

மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: பேனர்கள் வைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்; வேல்முருகன்

வேல்முருகன்: கோப்புப்படம்

சென்னை

இந்திய, சீன பிரதமர்கள் சந்திப்பின் போது பேனர்கள் வைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட் - அவுட்கள் வைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பேனர் விபத்தால் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், வரும் 11-ம் தேதி இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, இருவரையும் வரவேற்று பேனர்கள் வைக்க அனுமதி கேட்டு மத்திய அரசின் வெளியுறவுத் துறை சார்பிலும் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பொதுமக்களுக்கு இடையூறின்றி பேனர்கள் வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (அக்.3) வெளியிட்ட அறிக்கையில், "பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீயின் தாயாரே, "பேனர் கூடாது என்பதை அமல்படுத்தி வரும் தமிழக அரசே, மோடிக்கு பேனர் வைக்க வேண்டி, நீதிமன்றத்திற்கே சென்று சட்டத்தையே வளைக்கப் பார்ப்பதா? சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே," என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

அவரது கேள்வி முற்றிலும் நியாயமானதே. இந்தக் கேள்வியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் எழுப்புகிறது. அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்புச் சட்டம் மோடிக்கு மட்டும் பொருந்தாதா என்று கேட்பதுடன், மோடிக்கு பேனர் வைக்க, மத்திய அரசுடன் சேர்ந்து தமிழக அரசும் நீதிமன்றம் சென்றது, மோடியின் சர்வாதிகாரத்திற்கே துணைபோனதாகும் என்றும் சுட்டிக் காட்டுகிறோம்.

எனவே ஜனநாயகத்திற்கு எதிரான அதிமுக அரசின் இந்தச் செயலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டிப்பதுடன், அதனைக் கைவிடக் கோருகிறது," என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x