Published : 03 Oct 2019 05:01 PM
Last Updated : 03 Oct 2019 05:01 PM

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவர்: ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவர் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பீா்க்கன்கரணை ஏரிக்கரை தெருவைச் சோ்ந்தவா் பிரதீப் (14). இவருக்கு இரண்டு காதும் கேட்காத குறை இருந்துள்ளது. சானடோரியம் ஜட்ஜ் காலனியில் உள்ள அரசு ஆதரவற்றோா் இல்லத்தில் உள்ள பள்ளியில் பிரதீப் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டுத் தேர்வு முடிந்ததை அடுத்து விடுமுறை விடப்பட்டு இன்று காலை அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன.

பிரதீப்பின் பள்ளியும் திறக்கப்பட்டதை அடுத்து அவர் வீட்டிலிருந்து பள்ளி செல்வதற்காக பேருந்தில் வந்து பீா்க்கன்கரணை ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அங்கிருக்கும் ரயில் தண்டவாளத்தைக் கடந்து மறுபுறம் பள்ளிக்குச் செல்ல வேண்டும். பிரதீப் வழக்கம்போல் தண்டவாளத்தைக் கடந்து பள்ளி செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மின்சார ரயிலை அவர் கவனிக்கவில்லை.

ரயில் ஓட்டுநர் மாணவர் தண்டவாளத்தைக் கடப்பதையும், ரயில் மோதும் வாய்ப்புள்ளதையும் அறிந்து பலத்த சத்தத்துடன் ஹாரன் அடிக்க காதுகேளாத குறைபாட்டால் அவர் ரயில் வருவதைக் கவனிக்கவில்லை.

இதனால் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பிரதீப் உயிரிழந்தார். அவர் தண்டவாளத்தைக் கடந்த இடம் ரயில் தண்டவாளம் வளைந்து வரும் என்பதால் அவரால் ரயில் வருவதையும் பார்க்க முடியாதது விபத்துக்குக் காரணமாக அமைந்ததாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

காலாண்டுத் தோ்வு விடுமுறைக்குப் பின் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாற்றுத்திறனாளி மாணவா் ஒருவா் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x