Published : 03 Oct 2019 04:43 PM
Last Updated : 03 Oct 2019 04:43 PM
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிப்காட் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2012-ல் சட்டப்பேரவையில் 110 விதியில் காரைக்குடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். அந்த சமயத்தில் சிவகங்கை ஆட்சியராக இருந்த ராஜாராமனும் ‘காரைக்குடியில் சிப்காட் அமைந்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகத்துக்கு அறிக்கை அனுப்பினார்.
இதையடுத்து 2015-ல் அரசாணை வெளியிடப்பட்டு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க காரைக்குடி அருகே கழனிவாசலில் 90.43 ஏக்கர், திருவேலங்குடியில் 1,162.81 ஏக்கர் என, 1,126.15 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது.
இதற்காக 4 அலகுகள் ஏற்படுத்தப்பட்டு 4 வட்டாட்சியர்கள் தலைமையில் 18 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த திட்டத்தால் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து சிப்காட் திட்டத்திற்கு சிலர் முட்டுக்கட்டை போடப்பட்டு வந்தனர். இந்நிலையில் 2017-ல் சிப்காட் நிர்வாகம் காரைக்குடி சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அரசுக்கு பரிந்துரை செய்தது. தொடர்ந்து நிலம் கையகப்படுத்த தொடங்கப்பட்ட 4 அலகுகளில் மூன்று அலகுகள் 2018 பிப்.21-ல் மூடப்பட்டன. கோப்புகளை மட்டும் பராமரிக்க ஒரே ஒரு அலகு மட்டும் வட்டாட்சியர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் காரைக்குடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க சாத்தியக்கூறு இல்லை எனக் கூறி அத்திட்டத்தை கைவிட்டதாக கடந்த மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த அரசாணையில் சிப்காட்டிற்கு தேர்வான இடத்திற்கும் ரயில், கப்பல் போக்குவரத்துக்கும் தொடர்பு இல்லை. அதிக விலை கொடுத்து இடத்தைக் கையகப்படுத்த வேண்டியுள்ளதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும். அப்பகுதியில் அணை, ஆறு போன்ற நீர் ஆதாரமில்லை.
நிலத்தடிநீர் மட்டமும் அபாயகரமாக உள்ளது. தொழில் தொடங்குவதற்கான சுற்றுச்சூழல் சரியாக இல்லை. அதேபோல் பெரிய தொழிற்சாலைகளுக்கு உதவக்கூடிய சிறு, குறு தொழிற்சாலைகள் இல்லை. இதுபோன்ற காரணங்களால் திட்டத்தை கைவிடுவதாக கூறியுள்ளது.
இந்நிலையில் ‘சிப்காட் திட்டம் கைவிட்டது குறித்து எங்களுக்குத் தெரியாது. செய்தித்தாள்கள் மூலமே அறிந்து கொண்டேன். முதல்வரிடம் பேசி மீண்டும் திட்டம் கொண்டு வரப்படும்,’ என சிவகங்கை மாவட்ட அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஓராண்டுக்கு முன்பே சிப்காட் திட்டத்தை கைவிடுவதற்கான பணிகள் நடந்து வந்தநிலையில், சிப்காட் கைவிடப்பட்டது குறித்து தெரியாது என அமைச்சர் கூறியிருப்பது காரைக்குடி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க உள்ளநிலையில் காரைக்குடி சிப்காட் திட்டத்தை கைவிட்டது அதிமுகவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT