Published : 03 Oct 2019 03:27 PM
Last Updated : 03 Oct 2019 03:27 PM
திருநெல்வேலி
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கென்று சமீபகாலமாக ஒரு சென்டிமென்ட் இருக்கிறது. 2006 தேர்தலுக்குப்பின் தொடர்ந்து வந்த தேர்தல்களில் எல்லாம் வெளியூர் வேட்பாளர்களுக்கே இத்தொகுதி மக்கள் வெற்றிக்கனியை பரிசாக வழங்கியிருக்கிறார்கள்.
இத் தொகுதியில் 1977, 1980, 1984 தேர்தல்களில் வெற்றிபெற்ற ஜனதா மற்றும் அதிமுக கட்சி வேட்பாளரான ஜான்வின்சென்ட் இத் தொகுதிக்கு உட்பட்ட மருதகுளத்தைs சேர்ந்தவர். அதுபோல் அடுத்து 1989-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஆச்சியூர் மணியும் உள்ளூர்காரர்.
1996, 2001 தேர்தல்களில் வெற்றி பெற்ற எஸ்.வி. கிருஷ்ணன் (இந்திய கம்யூனிஸ்ட்), மாணிக்கராஜ் (அதிமுக) ஆகியோரும் உள்ளூர்காரர்கள்.
ஆனால், இடையில் 1991-ல் அதிமுக வேட்பாளராக வெற்றிபெற்று அமைச்சரான நடேசன் பால்ராஜ் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதைத் தொடர்ந்து 2006 மற்றும் 2016-ல் வெற்றிபெற்ற எச். வசந்தகுமார், 2011-ல் வெற்றிபெற்ற எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் வெளியூர்காரர்கள்.
தற்போது அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் உள்ளூர் வேட்பாளர். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரன் வெளியூர்காரர்.
உள்ளூர்காரர், வெளியூர்காரர் விவகாரம் இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலித்திருக்கிறது. உள்ளூர்காரர் என்றால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து உதவுவார், வெளியூர்காரர் என்றால் எப்போதாவது தொகுதி பக்கம் தலைகாட்டுவார் என்று அதிமுக தரப்பில் வாக்கு சேகரிப்பின்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தான் வெற்றிபெற்றால் இத் தொகுதியிலேயே தங்கி மக்களுக்காக பணியாற்றுவதாக காங்கிரஸ் வேட்பாளர் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.
இத்தொகுதியின் சமீபகால சென்டிமென்ட் நிறைவேறுமா, இல்லையா என்பது இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதே தெரியவரும்.
தொகுதியில் முகாமிடும் வெளியூர்காரர்கள்..
இத் தொகுதிக்கு தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் பணியாற்ற ஒருபுறம் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரும், மறுபுறம் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியினரும் வெளியூர்களில் இருந்து பெருமளவுக்கு வந்து இங்கு முகாமிட்டிருக்கிறார்கள்.
இவர்கள் தங்குவதற்காக நாங்குநேரி, களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் உள்ள பெரிய வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இதுபோல் இத் தொகுதியிலுள்ள பல்வேறு திருமண மண்டபங்களையும் கட்சியினர் முன்பதிவு செய்துள்ளனர். வெளியூரைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் இத் தொகுதியை ஒட்டியிருக்கும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கியிருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT