Published : 03 Oct 2019 01:54 PM
Last Updated : 03 Oct 2019 01:54 PM
போடி
போடியில் வறுமையால் பரிதவித்த தாய் 3 மகள்களுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு மகள்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
போடி 14-வது வார்டு பஜார் பகுதியைச் சேர்ந்தவர் பால் பாண்டி. அரிசி வியாபாரம் செய்து வந்த பால்பாண்டி நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயினால் அவதிப்பட்டு வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு பால்பாண்டி இறந்துவிட்டார். பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு கவுரவமாகவே வாழ்ந்துவந்த அந்தக் குடும்பம் பால்பாண்டி மறைவுக்குப் பின் மிகவும் வருந்தியுள்ளது.
பால்பாண்டியின் மனைவி லட்சுமி தையல் தொழில் மூலம் குடும்பத்தை ஓரளவு சமாளித்து வந்தார். ஆனாலும் மகள்கள் அனுசியா(18),ஐஸ்வர்யா(16), அக்க்ஷயா(10) என மூன்று குழந்தைகளையும் வைத்துக் கொண்டு தனியாக சிரமப்பட்டுள்ளார்.
கணவர் இல்லாமல் மூன்று பெண் குழந்தைகளையும் வைத்து வாழ்க்கை நடத்த முடியாமல் லட்சுமி பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மனம் வெறுத்த லட்சுமி இன்று(வியாழக்கிழமை) காலை மகள்களை எழுப்பி விஷம் கலந்த காபியை அவர்களுக்கு குடிக்கக் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார்.
சிறிது நேரத்தில் நான்குபேரும் வாயில் நுரைதள்ளியநிலையில் கீழே விழுந்தனர். இவர்களைப் பார்த்த பக்கத்துவீட்டுக்காரர்கள் உடன் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக நால்வரும் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சைப்பலனின்றி அனுசியா, ஐஸ்வர்யா ஆகியோர் இறந்தனர்.
லட்சுமி, அக்க்ஷயா மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வறுமை காரணமாக குடும்பமே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு 2 பேர் இறந்தது போடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போடி நகர் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT