Last Updated : 03 Oct, 2019 10:55 AM

 

Published : 03 Oct 2019 10:55 AM
Last Updated : 03 Oct 2019 10:55 AM

சவாலாகும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பாமக வாக்குகள்

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி- அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன்

விக்கிரவாண்டி

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் முடிந்துள்ளது.

விக்கிரவாண்டியில் திமுக சார்பில் புகழேந்தியும் அதிமுக சார்பில் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி போட்டியிடுகிறார். அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை.

அதிமுகவுக்கு கூட்டணிக் கட்சிகளான பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுகவுக்கு கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக, திமுக, பாமக இடையே மும்முனைப் போட்டியே நிலவியது. மக்கள் நலக் கூட்டணி சார்பில் களமிறங்கிய சிபிஎம் ஓரளவு வாக்குகள் மட்டுமே பெற்றது. பாஜக, நாம் தமிழர் கட்சிகள் சொற்ப வாக்குகளே பெற்றன.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் வென்ற மறைந்த எம்எல்ஏ ராதாமணி 63,757 வாக்குகள் பெற்று மும்முனைப் போட்டியில் வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவைத் தேர்தல் 2016; தேர்தல் முடிவுகள்

வேட்பாளர்

கட்சி

வாக்குகள்

ராதாமணி

திமுக

63,757

வேலு

அதிமுக

56,845

சி. அன்புமணி

பாமக

41,428

ராமமூர்த்தி

சிபிஎம்

9981

ஆதவன்

பாஜக

1291

முத்து குமாரசாமி

சுயேச்சை

699

சரவணகுமார்

நாம் தமிழர்

594


ஆனால், இந்த முறை வலிமையான இரு கட்சிகளும் இடையே மட்டுமே நேரடிப் போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவுக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது. அதுபோலவே மக்கள் நலக்கூட்டணியில் இருந்த தேமுதிகவும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதேசமயம் அந்த அணியில் இருந்த இரு இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளன. நாம் தமிழர் போட்டியிட்டாலும் கூட இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இடையே தான் நேரடிப் போட்டி நிலவும் எனத் தெரிகிறது. அதிமுகவுக்கு பாமக வாக்குகளும், திமுகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வாக்குகளும் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x