Published : 02 Oct 2019 10:01 AM
Last Updated : 02 Oct 2019 10:01 AM

ஆற்றின் நீரோட்டத்தால் ஈர்க்கப்பட்டு கூட்டம் கூட்டமாக வைகை அணையில் இருந்து வெளியேறும் மீன்கள்: வலைவீசும் மீனவர்கள் காட்டில் மழை

மூல வைகையாற்றி மீன் பிடிப்பதற்காக வலையை வீசும் அம்மச்சியாபுரம் பகுதி மீனவர்.

என். கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி

காட்டாற்று வெள்ளத்தால் செம்மண் கலந்த நீர் மூல வைகையில் இருந்து வருகிறது. இந்த மண் வாசனைக்கு ஈர்க்கப்படும் மீன்கள், வைகை அணையில் இருந்து எதிர் நீச்சல் போட்டு ஆறுகளை நோக்கிச் செல்கின்றன. இவற்றைப் பிடிப்பதில் உள்ளூர் மீனவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக வருசநாடு, அரசரடி, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் மூல வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண் டிருக்கிறது.

இதேபோல பெரியகுளம் வராக நதி, போடி கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட வைகையின் துணை ஆறுகளிலும் நீரோட்டம் அதிகரித்துள்ளது. சுருளி மற்றும் கும்பக்கரை அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் விநாடிக்கு 1,430 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து வைகை ஆற்றில் இருகரைகளை தொட்டு அதிக அளவில் நீர் செல்கிறது.

இதில் மூல வைகை மற்றும் பல்வேறு சிற்றாறுகளில் செம்மண் கலந்து பழுப்பு நிறத்தில் தண்ணீர் செல்கிறது.

மீன்களை இந்த மண் வாசனையும், அடர்த்தியான நீரும் கவரும் என்பதால், வைகை அணையில் உள்ள ஏராளமான மீன்கள் நீரோட்டத்துக்கு ஆற்று நீரில் செல்கின்றன. இதனால் அம்மச்சியாபுரம், சொக்கத்தேவன்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ளூர் மீனவர்கள் மீன்களை பிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வைகை அணையில் இருந்து அரப்படித்தேவன்பட்டி, குன்னூர், கருவேல் நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமானோர் மீன்பிடித்து வருகின்றனர்.

இது குறித்து பாலார்பட்டியைச் சேர்ந்த மீன வர் ரமேஷ் கூறுகையில், மூலவைகையில் காட்டாற்று வெள்ளம் ஓடுகிறது. மீன்களை இந்த வாசனை மிகவும் ஈர்க்கும். இதனால் வைகை அணையில் உள்ள மீன்கள் எதிர்நீச்சல் போட்டு பல கி.மீ. பயணித்து ஆற்றுப் பகுதிக்கு வருகின்றன. ஜிலேபி கெண்டை, சொட்டவாளை, கெளிறு உள்ளிட்ட பல்வேறு மீன்கள் பிடிபடுகின்றன. இதற்கான வீசுவலை மதுரையில் கிடைக்கிறது. ரூ. 3 ஆயிரத்துக்கு வலையை வாங்கி வந்து அதன் நுனிகளில் இரும்புக் கோன் வைத்து பின்னுவோம். ஆற்றில் நீரோட்டம் இல்லாதபோது கூலி வேலைக்குச் செல்வோம். மீன் பிடிப்பில் ஒரு நாளைக்கு ரூ. 500 வரை கிடைக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x