Published : 01 Oct 2019 06:09 PM
Last Updated : 01 Oct 2019 06:09 PM

தீபாவளி சிறப்புப் பேருந்துகள்; எங்கிருந்து இயக்கப்படும்?- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை

தீபாவளிக்காக சென்னையின் ஐந்து இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பான இரண்டாவது ஆய்வுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''தீபாவளிக்காக சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். அதாவது மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையின் இந்த 5 பகுதிகளில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக சென்னையில் இருந்து 4,265 சிறப்புப் பேருந்துகள், திருப்பூரில் இருந்து 1,165 சிறப்புப் பேருந்துகள், கோவையில் இருந்து 920 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு ஊரப்பாக்கத்தில் அரசு எஸ்இடிசி பேருந்துகளுக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கும் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. அங்கிருந்தும் பேருந்துகள் இயக்கப்படும்.

அதோடு, ஆயுத பூஜை, விஜய தசமியை ஒட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வர உள்ளதால், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதற்காக சென்னையில் இருந்து 1,695 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை ஏற்பாடுகளைச் செய்துள்ளது'' என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x