Published : 01 Oct 2019 04:17 PM
Last Updated : 01 Oct 2019 04:17 PM
மதுரை
மதுரையில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் அடிக்கும் 'அபேட்' மருந்துக்கு கொசுக்கள் சாகாமல் உள்ளதால் டெங்கு காய்ச்சல் மக்களை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 'டெங்கு' காய்ச்சலுக்கு ஏராளமானோர் இறந்தனர். அந்த ஆண்டு, சுகாதாரத் துறை புள்ளிவிவரப்படி மதுரையில் 1,500 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
அதற்கு முன் 2013-ம் ஆண்டு மேலூரில் டெங்கு காய்ச்சலுக்கு அதிக அளவு உயிரிழிப்பு, பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மட்டும் 4 குழந்தைகள் உட்பட 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மற்றவர்கள் அறிகுறியுடன் சிகிச்சை பெறுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனியார் மருத்துவமனைகளையும் சேர்த்து மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் மாவட்டம் முழுவதும் கொசுக்களை அழிக்க அபேட் மருந்துகளை அடிக்கும் பணிகளையும், தடுப்பதற்கான விழிப்புணர்வுp பணிகளையும் மேற்கொண்டனர். ஆனால், சுகாதாரத் துறையினர் அடித்த ‘அபேட்’ மருந்து மூலம் கொசுக்கள் சாகவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படத் தொடங்கியுள்ளனர்.
மாநகராட்சி சுகாதார ஊழியர் ஒருவர் கூறும்போது, "டெங்கு வராமல் தடுப்பதிலும், கொசுக்களை ஒழிப்பதிலும் 80 சதவீதம் மக்கள் பங்கு உள்ளது. அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சாலைகள், வளாகங்களில் தேங்கும் மழைத் தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு குறைவு. ஆனால் பிளாஸ்டிக், உடைந்த பாத்திரம், தேங்காய் சிரட்டைகளில்தான் புழுக்கள் வளரும்.
சிறிய அளவில் தேங்கும் நல்ல தண்ணீரில் மட்டுமே டெங்கு கொசுக்கள் வளரும். ஒரே நேரத்தில் 400 முதல் 500 முட்டையிடும்.
டெங்கு கொசுக்களை அழிக்க 5 லிட்டரில் 10 மில்லிலிட்டர் அபேட் மருந்து போட வேண்டும். இந்த மருந்து தண்ணீரில் மேலே எண்ணெய் படலம் போன்று வந்துவிடும். டெங்கு கொசுக்கள், தண்ணீருக்கு அடியில் சென்றுவிடும். அவை மூச்சுவிடுவதற்கு தண்ணீருக்கு மேலே வரும். அப்போது இந்த அபேட் மருந்து எண்ணெய் படலத்தில் சிக்கி மூச்சுவிடமுடியாமல் இறந்துவிடும்.
இந்த மருந்தை சரியான அளவில் கலந்தால் மட்டுமே கொசுக்கள் சாக வாய்ப்புண்டு. கொசுக்களை புழு நிலையிலே எளிதாக அழிக்க முடியும். கொசு நிலையை அடைந்துவிட்டால் அழிப்பது சிரமம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT