Published : 01 Oct 2019 03:39 PM
Last Updated : 01 Oct 2019 03:39 PM
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் காலாண்டு விடுமுறையை ஒட்டி இன்று விளையாடிக் கொண்டிருந்த 3 மாணவிகள், ஆற்றில் மூழ்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதன் காப்பாளராக சகுந்தலா செயல்பட்டு வந்தார்.
கங்கமடு என்ற பகுதியில் காப்பகத்துக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. காலாண்டு விடுமுறையை ஒட்டி 5 மாணவிகளை சகுந்தலா அங்கே விளையாட அழைத்துச் சென்றார். அங்கிருந்த குப்தா ஆற்றில் மாணவிகள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் 3 மாணவிகள் காணாமல் போனது தெரியவந்தது. தேடியதில் மூவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததை அறிந்தனர். அதில் ஆந்திர மாநிலம், குப்பம் யேசுப்பிரியா (15), தருமபுரியைச் சேர்ந்த சித்ரா (15) ஆகிய இருவரும் வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராமன் தொட்டியைச் சேர்ந்த அனுஷ்கா (10), நாச்சிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வேப்பனப்பள்ளி காவல்துறையினர், விசாரணை செய்தனர். மாணவிகளின் உடல்களை மீட்டு கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
8 நாட்களில் 11 பேர் பலி
கடந்த 8 நாட்களில் ஆற்றில் மூழ்கி 11 மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை கந்திகுப்பத்தில் 2 குழந்தைகள், புதன்கிழமையன்று அதே பகுதியில் 2 பேர், வியாழன் அன்று அட்கோவில் ஒரு சிறுமி, சனிக்கிழமை, ஊத்தங்கரை அருகே 2 சிறுவர்கள், நேற்று மகராஜகடை அருகே ஒரு சிறுவன், இன்று 3 மாணவிகள் என 8 நாட்களில் 11 சிறுவர் சிறுமிகள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக, காலாண்டு விடுமுறையைப் பாதுகாப்பாகக் கழிக்கும்படி, அரசு நிர்வாகம் தெரிவித்திருந்தது. எனினும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மாணவர்கள் பலியாவது தொடர்ந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT