Published : 01 Oct 2019 01:34 PM
Last Updated : 01 Oct 2019 01:34 PM
சென்னை
தேர்தல் நிதி விவகாரம் குறித்து பிரேமலதாவுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.1) தன் தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கத்தில் ரூ.37 லட்சம் செலவில் அமையவிருக்கும் கான்கிரீட் சாலைப் பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, குளத்தூரில் உள்ள குளம் ஒன்றை ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இதையடுத்து, ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"நேர்மை நகர், பாலாஜி நகர், அஞ்சுகம் நகர் உள்ளிட்ட சுற்றியிருக்கும் 15 பகுதிகளில் 50,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வேண்டும் என பலமுறை நான் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளேன். அதன்காரணமாக சுமார் 15 கோடி ரூபாய் செலவில் அந்த பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
கணேஷ் நகரில் தடையில்லா மின்சாரம் வழங்க நான் வலியுறுத்தி வந்த நிலையில், அந்த பணிகளையும் விரைந்து முடிக்குமாறு கூறியுள்ளேன். நேர்மை நகரில் இருக்கும் மயான பூமி பணிகள் முழுமையடையும் சூழல் வந்துள்ளது.
2017 மழையின்போது எல்சி1 மார்க்கெட் ரோடு பகுதி ஒரு குப்பை மேடாக காட்சியளித்தது. அதனை சுத்தம் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன். அந்த நிலை தொடராமல் இருக்க அப்பகுதியில் மாநகராட்சி சார்பாக சாலை அமைக்கக் கோரிக்கை விடுத்தேன். அப்போது, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அந்த சாலை அமைக்க நிதி ஒதுக்கி தரப்பட்டது. ஆனால் அந்தப் பணி தொடர முடியாமல் நின்று போனதற்குக் காரணம், ரயில்வேயின் இடமாக இருந்ததால் தடை ஏற்பட்டது. அதன்பிறகு, ரயில்வே யூனியன் பொதுச் செயலாளராக இருக்கும் கண்ணையன் மூலமாக, ரயில்வே துறையிடம் இதுகுறித்து எடுத்துச் சொல்லி இந்த பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
வில்லிவாக்கம் - குளத்தூரை இணைக்கும் பாலம் அமைக்க வலியுறுத்தி, பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன," என ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக நிதி வழங்கியதாக எழுப்பப்பட்ட விவகாரம் குறித்து ஸ்டாலின் பதில் கூற வேண்டும் என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், "பிரேமலதாவுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சம்பந்தப்பட்ட வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் இதற்குத்தான் பதில் சொல்ல வேண்டும். ஏற்கெனவே அதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டோம்’’ எனத் தெரிவித்தார்.
பிரதமர் வருகை குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஸ்டாலின், "கடந்த 8 ஆண்டுகளாக தமிழக அரசு, பிரதமர், மத்திய அமைச்சர்களிடத்தில் மனுக்கள்தான் அளிக்கின்றனர். மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை," எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT