Published : 01 Oct 2019 12:41 PM
Last Updated : 01 Oct 2019 12:41 PM

வடகிழக்குப் பருவமழை எதிரொலி : சென்னை மாநகராட்சி திருமண மண்டபங்கள் முன்பதிவு நிறுத்தம்

சென்னை

வடகிழக்குப் பருவமழையை ஒட்டி நிவாரணப் பணிகளுக்காக சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடங்களில் முன்பதிவு செய்த நாட்களைத்தவிர இனி வாடகைக்கு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை இந்த மாதம் இரண்டாம் வாரத்திற்குமேல் தொடங்குகிறது. இந்த ஆண்டு கணிசமான மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட மாநிலங்களில் பல மாநிலங்களில் கடும் மழை, வெள்ளம் என தென்மேற்குப் பருவ மழையும் அதை ஒட்டிய நிகழ்வுகளும் உள்ள நிலையில் வடகிழக்குப் பருவமழையும் ஒருவேளை அதிகப்படியாக பெய்யும்பட்சத்தில் அதற்கேற்ப தயார் நிலையில் இருப்பதற்காக பேரிடர் தொடர்பான கூட்டங்களை சென்னை மாநகராட்சி நடத்தி வருகிறது.

வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்வது குறித்து சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது. பருவமழையையொட்டி தேவைப்படும் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான சமுதாய நலக்கூடங்கள் குறித்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சமூதாய நலக்கூடங்கள் அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019 வரை முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

ஏற்கெனவே, அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019 மாதம் வரை முன்பதிவு செய்தவர்களுக்கு, நிவாரணப் பணிகள் காரணமாகத் தேவை ஏற்பட்டால் குறுகிய கால முன் அறிவிப்புடன் நிகழ்ச்சி ரத்து செய்யப்படும்.

எனவே, வெள்ள நிவாரணப் பணிககள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019 வரை மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளைத் தவிர இனிவரும் காலங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சமூதாய நலக்கூடங்களின் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது”.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x