Published : 30 Sep 2019 08:11 PM
Last Updated : 30 Sep 2019 08:11 PM
திருநெல்வேலி
நாங்குநேரி தொகுதியில் போட்டியிட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான இன்று மட்டும் 25 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளை சேர்ந்தவர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் திரண்டதால் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. 26-ம் தேதி வரையில் 2 சுயேச்சைகள் மட்டுமே மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 27-ம் தேதி 7 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களான அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜராஜந் ஆகியோர் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் புடைசூழ நாங்குநேரி தாலுகா அலுவலகத்துக்கு வந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதுபோல் ஏராளமான சுயேச்சைகளும் மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். மனுத்தாக்கல் முடிவுறும் பிற்பகல் 3 மணிவரையில் 15 சுயேச்சைகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதன்பிறகு மனுத்தாக்கலுக்கு காத்திருந்த சுயேச்சை வேட்பாளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, ஒவ்வொருவராக மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் மனுத்தாக்கல் முடிய மாலை 5.30 மணிக்கு மேலாகியது. மொத்தமாக இன்று மட்டும் 25 சுயேச்சைகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 28 பேர் மனு தாக்கல் செய்தனர்.
முக்கிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஒரே நாளில் தாலுகா அலுவலகத்துக்கு திரண்டுவந்து மனு தாக்கல் செய்ததால் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தமாக இத் தொகுதியில் போட்டியிட 37 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தம் 46 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் மீதான பரிசீலனை இன்று முதல் நடைபெறுகிறது. வரும் 3-ம் தேதி பிற்பகல் 3 மணிவரை மனுக்களை திரும்பப்பெறலாம். அன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT