Published : 30 Sep 2019 01:18 PM
Last Updated : 30 Sep 2019 01:18 PM

இந்தியா மீது உலகம் நம்பிக்கை வைத்திருக்கிறது; எதிர்காலக் கனவை உங்கள் கண்களில் நான் பார்க்கிறேன்: ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசிய காட்சி

சென்னை

என்னுடைய அமெரிக்கப் பயணத்தின்போது உலகத் தலைவர்களுடான கலந்துரையாடலின்போது, இந்தியா மீது அனைவரும் பொதுவான நம்பிக்கை வைத்திருப்பதை அறிய முடிந்தது. இங்கு அமர்ந்துள்ள உங்களின் கண்களில் எதிர்காலத்தின் கனவைப் பார்க்க முடிகிறது என்று பிரதமர் மோடி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பெருமிதத்தோடு பேசினார்

சென்னையில் உள்ள ஐஐடி உயர் கல்வி நிறுவனத்தில் இன்று நடக்கும் 56-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவும், சிங்கப்பூர் இந்தியா 2019 ஹேக்கத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கவும் பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இன்று காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதன்பின் பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாஜகவினர் மத்தியில் பிரதமர் மோடி சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிங்கப்பூர் இந்தியா ஹேக்கத்தான் 2019 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அதன் ஐஐடி கல்வி நிறுவனத்தின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

''என்னுடைய சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின்போது, உலகத் தலைவர்களுடன், தொழில்நிறுவனத் தலைவர்களுடன், தொழிலதிபர்களும், முதலீட்டாளர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினேன்.
அப்போது ஒரு விஷயத்தில் அனைவரும் பொதுவாக உரையாடினோம். அது புதிய இந்தியா மீதான நம்பிக்கை. ஆம், உலகம் இந்தியா மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. இந்தியாவில் தனித்துவம் வாய்ந்த பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை உலகம் காண்கிறது.

உலக அளவில் இந்தியர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்குகிறார்கள். இதுபோன்ற செய்பவர்கள், சாதிப்பவர்கள் யார், ஐஐடியில் படித்து முடித்துச் சென்ற உங்களின் முன்னாள் மாணவர்கள். உலக அளவில் இந்தியாவை வலிமையான அடையாளமாக நீங்கள் மாற்றுகிறீர்கள். நான் உங்களின் கண்களில் எதிர்காலத்தின் கனவுகளை என்னால் காண முடிகிறது

இந்தியா 5 லட்சம் கோடி பொருளாதாரம் கொண்ட நாடாக மாற முயன்று வருகிறது. உங்களின் கண்டுபிடிப்பும், தொழில்நுட்பத்தில் ஆர்வமும் கனவுகளை நனவாக்கும் எரிபொருளாக அமையும். உலக அளவில் இந்தியா பொருளாதாரத்தில் கடும் போட்டியளிக்கும் நாடாக மாறும்.

பொருளாதாரம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் சிறந்த கூட்டுக் கலவையாகவே இந்தியாவின் கண்டுபிடிப்பு இருக்கிறது. நான் மாணவர்களுக்கு சொல்லிக்கொள்ளவது என்னவென்றால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தொடக்கத்தில் உணவின்றி, உறக்கமின்றி கடினமாக உழைக்கும் போது, புத்தாக்கத்தின் உத்வேகம், சிறப்பு சரியான நேரத்தில் நம்முடன் வரும்.

நம்முடைய நாட்டில் ஆய்வுப் பணி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு செழுமையான சூழியல் முறையை உருவாக்கப் பணியாற்றி வருகிறோம். அடல் இன்ங்குபேஷன் மையம் ஏராளமான மையங்களை உருவாக்கி வருகிறது. அடுத்ததாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சந்தையைத் தேடுவதுதான்.

உங்களின் கடின உழைப்பு சாத்தியமில்லாததை சாதித்துக் காட்டும். உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அந்த வாய்ப்புகள் அனைவருக்கும் எளிதானது அல்ல. கனவு காண்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். சவால்களை எப்போதும் வைத்திருங்கள். இதுதான் உங்களைச் சிறப்பானவர்களாக மாற்றும்.

நீங்கள் எங்கு பணியாற்றுகிறீர்கள், எங்கு வசிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, மனதை ஒருமுகமாக வைத்து, தாய்நாட்டின் தேவையை அறிந்து, பிறந்த மண்ணின் தேவையை உணர்ந்து பணி செய்வதுதான். நம்முடையய பணி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் எப்படி நம்முடைய தாய்நாட்டுக்குப் பயன்படும் என்பதைச் சிந்தியுங்கள். இது உங்களின் சமூகப் பொறுப்பும் கூட

இன்று சமூகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நிராகரித்து வருகிறோம். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, அதே பயன்பாடு உடைய, ஆனால், பாதகமான அம்சங்கள் இல்லாதவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களைத்தான் நாங்கள் இதற்காக எதிர்நோக்கி இருக்கிறோம்.

சுவாமி விவகானந்தர் கூறியதைப் போல், இருவகையான மக்கள் இருக்கிறார்கள். என்றும் வாழ்கிறவர்கள், வாழ்ந்துவிட்டுச் சென்றவர்கள். மற்றவர்கள் மகிழ்ச்சிக்காக வாழ்கிறவர்கள்தான் மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை வாழ்கிறார்கள்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x