Published : 30 Sep 2019 01:09 PM
Last Updated : 30 Sep 2019 01:09 PM
திருநெல்வேலி
நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளர் ரெட்டியார்ப்பட்டி வெ.நாராயணன் இன்று (திங்கள்கிழமை) தேர்தல் அதிகாரி நடேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இரு தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து கடந்த செப்.22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அவர்களிடம் நேர்காணலும் நடத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியக் கழகச் செயலாளராக இருக்கும் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன் விக்கிரவாண்டி தொகுதிக்கும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருக்கும் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் நாங்குநேரி தொகுதிக்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
நாங்குநேரி அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் இன்று மனுத்தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி நடேசனிடம் வேட்பு மனுவை வழங்கினார். மனு தாக்கல் செய்ய இன்று (செப். 30) கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (அக். 1) நடக்கிறது. அக்டோபர் 3-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
யார் இந்த நாராயணன்?
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் நாராயணன். இவருடைய தந்தை பெயர் வெட்டும் பெருமாள் நாடார்.
நாராயணன் 1986 முதல் அதிமுக உறுப்பினராக உள்ளார். 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் வரை அதிமுக கிளை கழகச் செயலாளராகப் பணியாற்றி உள்ளார். 1996 முதல் ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவராக ஒரு முறையும், துணைத்தலைவராக இருமுறையும் பணியாற்றி உள்ளார்.
2004 -ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் பாளையங்கோட்டை தேர்தல் பணிக் குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தேர்தல் பணிக் குழு உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார்.
2009-ம் ஆண்டு திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். 2012-ம் ஆண்டு மாவட்ட புறநகர் அதிமுக துணைச் செயலாளராகப் பணியாற்றி உள்ளார்.
2013-ம் ஆண்டு முதல் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். ரெட்டியார்பட்டி நாராயணனின் மனைவி பவளச் செல்வி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நாராயணனுக்கு 54 வயது ஆகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT