Published : 28 Sep 2019 07:01 PM
Last Updated : 28 Sep 2019 07:01 PM
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி ஆர். மனோகரன் (60) போட்டியிடுகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகேயுள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் மனோகரன். தற்போது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இதற்குமுன் கட்சியில் தாம்பரம் நகர தலைவர், காஞ்சிபுரம் மாவட்ட வர்த்தக அணித் தலைவர் பொறுப்புகளையும் வகித்துள்ளார். எம்பிஏ படித்துள்ள இவர் சென்னையில் ரூபி பில்டர்ஸ் என்னும் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
15 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணிபுரிந்துள்ளார். அகில உலக காந்திய சிந்தனை அமைப்பின் தமிழக தலைவராகவும் செயல்படுகிறார். இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு அசோக் என்ற மகனும், சிந்தியா என்ற மகளும் உள்ளனர்.
உறுப்பினர்கள் சேர்க்கையால் கிடைத்த பலன்..
கடந்த மக்களவை தேர்தலுக்குமுன் சக்தி திட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை ராகுல்காந்தி அறிவித்தபோது தமிழகத்திலேயே அதிகமான உறுப்பினர்களை சேர்த்து 2 லட்சம் புள்ளிகளை பெற்றது என்ற பெருமையை ரூபி மனோகரன் பெற்றுள்ளார்.
மக்களவைத் தேர்தலின்போது கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட இவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசிநேரத்தில் கட்சி தலைமை எச். வசந்தகுமாரை வேட்பாளராக களமிறக்கியிருந்தது. தற்போது அருகிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட மனோகரனுக்கு கட்சி தலைமை வாய்ப்பு அளித்துள்ளது. இவர் தனது வேட்புமனுவை நாளை மறுநாள் (30-ம் தேதி) தாக்கல் செய்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT