Published : 28 Sep 2019 04:32 PM
Last Updated : 28 Sep 2019 04:32 PM

திருப்பூரில் இருந்து தீபாவளிக்கு 300 சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 

திருப்பூர்

திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்துக்குப் புதிதாக 7 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான பயன்பாட்டை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ''கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் விரைவில் இயக்கப்படும்.

விவசாயப் பெருங்குடி மக்களின் காளைகள், பசுக்கள் ஆகியவை எங்கிருந்தாலும், அங்கேயே நேரடியாகச் சென்று, அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும். கோமாரி முதலான கால்நடை நோய்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும். தடுப்பூசிகள் போடப்படும். இந்த மாதத்துக்குள் இந்த நடைமுறை வழக்கத்துக்கு வரும்.

அதன்பிறகு மருத்துவர்கள் கால்நடைகள் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் சென்று சிகிச்சை அளிப்பர். அம்மா ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நேரடியாகச் சென்று தடுப்பூசிகள் போடப்படும்.

திருப்பூரில் இருந்து தீபாவளிக்காக தொழிலாளர்கள், தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்'' என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அப்போது திருப்பூர் மாவட்ட ஆட்சியர், காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்துகள், பேருந்து நிறுத்தங்கள் என பல்வேறு முன்னேற்பாடுகளைத் தமிழக அரசு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x