Published : 27 Sep 2019 04:52 PM
Last Updated : 27 Sep 2019 04:52 PM
மதுரை
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளில் அதிகாரிகளின் ஆக்கபூர்வ பணி அவசியம் என வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் வருவாய், பேரிடர் மேலாண்மைதுறை சார்பில், வடகிழக்கு பருவ மழை குறித்த முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.
அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ, வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால், மதுரை ஆட்சியர் ராஜசேகர், காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், எஸ்பி மணிவண்ணன் மற்றும் ராஜன் செல்லப்பா உட்பட எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி, இந்த முன்னேற்பாடு கூட்டம் நடக்கிறது. இதையொட்டி மாவட்டந்தோறும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகாரிகளுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பேரிடர் மேலாண்மைத் துறை உருவாக்கப்பட்டது. தற்போது, அத்துறைக்கு தேவையான உபரணங்கள் வாங்க முதல்வரும் வேண்டிய நிதி ஒதுக்கீடு அளிக்கிறார்.
வடகிழக்கு பருவமழைக்கு உயிர் சேதம் ஏற்படாமல் முன்னேற்பாடு செய்யப்படும். மதுரை மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு அதிகாரிகளின் பங்களிப்பு, அர்ப்பணிப்பு தேவை" என்றார்.
தொடர்ந்து பேசும்போது, "எய்ம்ஸ் மருத்துவமனை, சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலங்களுக்கு நிதி ஒதுக்கி, பணி தொடங்க உள்ளது. முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் மூலம் மக்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுகின்றன" எனத் தெரிவித்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசும்போது, "பருவமழை காலத்தில் எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம். அத்தகைய சூழலில் பேரிடரை எதிர்கொள்வது சவாலானது. அதை அதிகாரிகள் சிறப்பாக செய்ய வேண்டும். முதல்வரின் செயல்பாடுகள் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினே பாராட்டும் வகையில் உள்ளது" என்றார்.
ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..
முன்னதாக அரசு சுற்றுலா மாளிகையில் நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தல் ஆலோசனைக்குப் பின், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இரு தொகுதி இடைத்தேர்தலிலும் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். உலக முதலீட்டாளர் மாநாட் டின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு உயிர்தர பல நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தி முதல்வர் சரித்திரம் படைத்துள்ளார்" என்றார்.
ஆணையரின் கேள்விக்குத் திணறிய அதிகாரிகள்..
முன்னேற்பாடு குறித்து இ.அடங்கல் கையெட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டார். முன்னேற்பாடு குழு நியமனம் குறித்து ஆட்சியர் பேசியபோது, அமைச்சர், வருவாய் நிர்வாக ஆணையர் சில வினாக்களை எழுப்பினர். இதற்கு ஒருசில அதிகாரிகள் பதிலளிக்கத் திணறினர். இதனால் மீண்டும் மீட்புக் குழுக்களின் பணிகளை முறையாக விளக்கி, சீரமைக்க ஆட்சியருக்கு ஆணையர் உத்தரவிட்டார். செல்லூர், வண்டியூர் கண்மாய்களை பலப்படுத்தி, முழுவதுமாக நீர் நிரப்பவேண்டும். நிரம்பியபிறகே உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், தாழ்வான பகுதிகளில் கவனம் செலுத்தவேண்டும் என, வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT