Published : 27 Sep 2019 01:15 PM
Last Updated : 27 Sep 2019 01:15 PM
சிவகங்கை
இனி இந்திய வரலாற்றை கீழடியிலிருந்து பார்க்க வேண்டும் என்பதை இந்த அகழாய்வு உறுதி செய்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெற்றுவரும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆய்வு செய்தார். அவரிடம் அகழாய்வு நிகழ்வுகளை தொல்லியல் அதிகாரிகள் விளக்கினர். மு.க.ஸ்டாலினுடன் அங்கிருந்த மாணவ, மாணவிகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
ஆய்வின்போது மதுரை எம்.பி. வெங்கடேசன், முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, ராமச்சந்திரன், பெரியகருப்பன், தங்கம்தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், "தமிழக வரலாற்றின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் கீழடி அகழாய்வில் பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.
கீழடிக்கு வந்ததில் பெருமை அடைகிறேன். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை. கீழடி பெருமையை வெளிக்கொண்டுவந்த தமிழக அரசு, தமிழறிஞர்கள், மத்தியத் தொல்லியல் துறையை திமுக சார்பில் பாராட்டுகிறேன்.
தொடர்ந்து கீழடி அகழாய்வை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கீழடிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இங்கு கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் 6-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சனோலி, குஜராத் மாநிலம் வாட் ஆகியவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து அருங்காட்சியகம் அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதைப் போல் கீழடியையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறவித்து உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
சில தினங்களுக்கு முன் தமிழக மக்கள் சார்பாக எம்.பி.க்கள் கனிமொழி, வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மத்தியத் தொல்லியல் துறை இணை அமைச்சரைச் சந்தித்து கீழடி அகழாய்வு விஷயங்களை மேம்படுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வைத் தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். அது தமிழகத்தில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி உறுதி செய்துள்ளது.
தமிழகப் பண்பாடு, கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் விதமாக அகழாய்வு செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்த வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT