Published : 27 Sep 2019 11:09 AM
Last Updated : 27 Sep 2019 11:09 AM

சென்னையில் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் நிவாரண நடவடிக்கை; 15 மண்டலங்களுக்கு 15 ஐஏஎஸ் அதிகாரிகள்: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் நிவாரண நடவடிக்கைகளைக் கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதற்காக 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் ஆணையாளர் கோ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டல அளவில் பணிகளை மேற்பார்வையிட தமிழக முதல்வர் உத்தரவின்படி நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆலோசனையின்படி, ஒவ்வொரு மண்டலத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், இந்து சமய அறநிலையத் துறை, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறை, பி.எஸ்.என்.எல், சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தென்னக ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்களுடன் அவர்கள் துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பருவமழைக் காலங்களில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து உடனுக்குடன் பணிகள் மேற்கொள்ளவும், அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் மண்டலக் கண்காணிப்பு அலுவலர்களிடமும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்களிடம் தகவல் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 1 முதல் 200 வார்டுகளில் உள்ள திறந்தவெளி கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்திட தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் பணியாளர்கள் விடுப்பு எடுக்காமல் பணிகள் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மண்டலக் கண்காணிப்பாளர்களின் ஆய்வின்போது தெரிவிக்கப்படும் அனைத்துப் பணிகளையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நிலைகளிலும் பெருநகர சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்கள் எம்.கோவிந்த ராவ், பி.மதுசுதன் ரெட்டி, பி.குமாரவேல் பாண்டியன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்.கண்ணன், வணிக வரித்துறை இணை ஆணையாளர் (நிர்வாகம்) இ.சுந்தரவல்லி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநர் வி.விஷ்ணு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர் சஜ்ஜன்சிங் ஆர். சவான், வட்டாரத் துணை ஆணையர்கள், முதன்மைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை குடிநீர் வடிகால் துறை, மின்சார வாரியம், போக்குவரத்து காவல்துறை, வனத்துறை, தெற்கு ரயில்வே, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் விவரம் :

கண்காணிப்பு அலுவலர்கள் பெயர் மண்டலம்

மண்டலம்-1 - திருவொற்றியூர் - கே.நந்தகுமார், அரசு செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,

மண்டலம்-2 - மணலி - ஆர்.கண்ணன், இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்

மண்டலம் -3 - மாதவரம் - இ.சுந்தரவல்லி, இணை ஆணையாளர் (நிர்வாகம்), வணிக வரித்துறை

மண்டலம் - 4 - தண்டையார்பேட்டை - டி.என்.வெங்கடேஷ், மேலாண்மை இயக்குநர், கோ-ஆப்டெக்ஸ்

மண்டலம்-5 -ராயபுரம் - பி.உமாநாத், மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்

மண்டலம்- 6 - திருவிக நகர் - சி.காமராஜ், இயக்குநர், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை வளர்ச்சி

மண்டலம் -7 -அம்பத்தூர் - வி.விஷ்ணு, செயல் இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்

மண்டலம் -8 - அண்ணாநகர்- சி.சமயமூர்த்தி, ஆணையர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.

மண்டலம்-9 -தேனாம்பேட்டை - ஷன்சோங்கம் ஜடக் சிரு, ஆணையர், தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்.

மண்டலம் -10 - கோடம்பாக்கம் - சி.விஜயராஜ் குமார், அரசு செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.

மண்டலம் - 11- வளசரவாக்கம் - சஜ்ஜன்சிங் ஆர். சவான், மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்.

மண்டலம்- 12 - ஆலந்தூர் - மேகநாத ரெட்டி, இணை ஆணையாளர் (அதிக வரி செலுத்துவோர் பிரிவு), வணிக வரித்துறை.

மண்டலம்-13 - அடையாறு - கே.பாலசுப்பிரமணியன், துணை செயலாளர், தொழில் துறை.

மண்டலம்- 14- பெருங்குடி ஆர்.நந்தகோபால், ஆணையாளர், தொழிலாளர் நலத்துறை.

மண்டலம்-15 - சோழிங்கநல்லூர் - கணேஷ், இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை.

மேற்கண்ட ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னையின் 15 மண்டலங்களிலும் பருவமழைக்கால பேரிடர் பணியைக் கவனிப்பார்கள்.

இவ்வாறு ஆணையர் பிரகாஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x